என் மலர்

    கிரிக்கெட்

    பஞ்சாப்-கொல்கத்தா போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்
    X

    பஞ்சாப்-கொல்கத்தா போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக 4 தொடக்க வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்தனர்.
    • அதிக சிக்சர் அடித்த அணி என்ற சாதனையை பஞ்சாப் படைத்தது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவுக்கு எதிராக 262 ரன் இலக்கை எடுத்துப் புதிய வரலாறு படைத்தது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணிக்கு 262 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பில்சால்ட் 37 பந்தில் 75 ரன்னும் (6 பவுண்டரி, 6 சிக்சர்), சுனில் நரீன் 32 பந்தில் 71 ரன்னும் (9 பவுண்டரி, 4 சிக்சர்), வெங்கடேஷ் அய்யர் 23 பந்தில் 39 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், சாம்கரண், ராகுல் சஹார் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 8 பந்து எஞ்சியிருந்த நிலையில் 262 ரன் இலக்கை எடுத்து 20 ஓவர் போட்டியில் புதிய வரலாறு படைத்தது. அந்த அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 48 பந்தில் 108 ரன்னும் (8 பவுண்டரி, 9 சிக்சர்), சஷாங் சிங் 28 பந்தில் 68 ரன்னும் (2 பவுண்டரி, 8 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங் 20 பந்தில் 54 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். பஞ்சாப் அணிக்கு கிடைத்த 3-வது வெற்றி இதுவாகும். கொல்கத்தா அணிக்கு 3-வது தோல்வி ஏற்பட்டது.

    இந்தப் போட்டியில் பல புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 262 ரன்னை சேஸ் செய்ததன் மூலம் 20 ஓவர் போட்டியில் பஞ்சாப் அணி புதிய சாதனை படைத்தது.

    இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 259 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இதை பஞ்சாப் அணி நேற்று முறியடித்துப் புதிய உலக சாதனை நிகழ்த்தியது.

    ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை சேசிங் செய்ததே சாதனையாக இருந்தது. மேலும் அதே ராஜஸ்தான் அணி இதே கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக கடந்த 16-ந்தேதி 224 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்று இருந்தது. இந்த ரன் சேசிங்கை பஞ்சாப் அணி நேற்று முறியடித்தது.

    இந்த ஆட்டத்தில் மொத்தம் 42 சிக்சர்கள் (கொல்கத்தா 18 + பஞ்சாப் 24) அடிக்கப்பட்டன. இது புதிய சாதனையாகும். ஐதராபாத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி சன்ரைசர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதிய போட்டியில் 38 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

    24 சிக்சர்கள் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த அணி என்ற சாதனையை பஞ்சாப் படைத்தது. கடந்த 20-ந்தேதி டெல்லிக்கு எதிராக ஐதராபாத் 22 சிக்சர்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதை பஞ்சாப் முறியடித்து அதிக சிக்சர் மழை பொழிந்தது.

    ஒட்டுமொத்த 20 ஓவரில் 2-வது அதிக சிக்சர்கள் ஆகும். மங்கோலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த ஆட்டத்தில் நேபாளம் 26 சிக்சர்கள் அடித்து இருந்தது.

    ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக 4 தொடக்க வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்தனர். கொல்கத்தா அணியில் பில்சால்ட் (75), சுனில் நரீன் (71), பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் (54), பேர்ஸ்டோ (108) ஆகியோர் அரை சதத்துக்கு மேல் ரன்களை எடுத்தனர்.

    மேலும் 4 தொடக்க வீரர்களும் சேர்ந்து 308 ரன்கள் எடுத்துள்ளனர். இதுவும் ஐ.பி.எல்.லில் சாதனையாகும்.

    இதற்கு முன்பு கடந்த ஆண்டு குஜராத்-லக்னோ போட்டியில் தொடக்க வீரர்கள் 293 ரன்கள் எடுத்து இருந்தனர்.

    மேலும் 5 அரை சதங்கள் 25 அல்லது அதற்கு குறைவான பந்துகளில் (ஸ்டிரைக்ரேட் 200) அடிக்கப்பட்டதும் சாதனையாகும். பில்சால்ட் 25 பந்திலும், நரீன் 23 பந்திலும், பிரப்சிம்ரன் சிங் 18 பந்திலும், பேர்ஸ்டோ 23 பந்திலும், சஷாங் சிங் 23 பந்திலும் அரை சதத்தை தொட்டனர்.

    பஞ்சாப் அணி 7-வது முறையாக 200 ரன்னுக்கு மேற்பட்ட இலக்கை சேஸ் செய்துள்ளது. இதற்கு முன்பு மும்பை அணி 6 தடவை 200 ரன்னுக்கு மேற்பட்ட இலக்கை எடுத்து இருந்தது.

    Next Story
    ×