என் மலர்

    சினிமா

    உதயகுமார் டைரக்ஷனில் ரஜினிகாந்த்
    X

    உதயகுமார் டைரக்ஷனில் ரஜினிகாந்த்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    "கிழக்கு வாசல்'' படத்துக்குப்பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் நடித்த படங்களை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.
    "கிழக்கு வாசல்'' படத்துக்குப்பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் நடித்த படங்களை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

    1992-ம் ஆண்டு, ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்த மிகப்பெரிய வெற்றிப்படம் "சின்னக்கவுண்டர்.'' இதில் விஜயகாந்த்தும், சுகன்யாவும் இணைந்து நடித்தனர்.

    படத்தின் திரைக்கதை, வசனம், பாடல் ஆகிய பொறுப்புகளையும் உதயகுமார் ஏற்றிருந்தார்.

    விஜயகாந்த்துக்கு இது முற்றிலும் மாறுபட்ட படம். பெரும்பாலும் `ஆக்ஷன்' படங்களில் நடித்து வந்த அவர், இதில் கதர் சட்டை, கதர் வேட்டி அணிந்து, கிராமத்து பிரமுகராக வலம் வந்தார்.

    முதலில், `இந்த படம் வெற்றி பெறுமா?' என்பதில் விஜயகாந்துக்கே சந்தேகம் இருந்தது. வீரதீரச் செயல்கள் புரியும் ஹீரோவாக தன்னை வழிபடும் ரசிகர்கள், `கதர் சட்டை' கவுண்டராக ஏற்பார்களா என்று அவர் தயங்கினார்.

    ஆனால், படம் பிரமாதமாக அமைந்து, சக்கை போடு போட்டது.

    படத்தைப் பார்த்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார், "கதர் சட்டைக்கு மரியாதை கொடுக்கும் படம்'' என்று பாராட்டினார்.

    இந்தப்படத்தில் ஒரு காட்சி.

    விஜயகாந்த் பம்பரத்தை சுழற்றிவிட, அது விர் என்று பறந்து சென்று தரையில் படுத்திருக்கும் சுகன்யாவின் வயிற்றில் அழகாகச் சுற்றும்!

    இந்தக் காட்சி ரசிகர்களுக்கு கிளு கிளுப்பையும், பெண்களிடம் சலசலப்பையும் உண்டாக்கியது.

    1992-ல் இசை அமைப்பாளர் இளையராஜா சொந்தமாகத் தயாரித்த படம் "சிங்காரவேலன்.'' கமலஹாசனும், குஷ்புவும் இணைந்து நடித்த இந்தப் படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

    இதுபற்றி உதயகுமார் கூறியதாவது:-

    "கமல் சாரை வைத்து, சீரியசான கதை அம்சம் கொண்ட ஒரு படத்தை உருவாக்கவேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால ஆசை. ஆனால் அவரை வைத்து, நகைச்சுவைப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்றாலும் கமல் அருமையாக நடித்து, இப்படத்துக்கு வெற்றி தேடித்தந்தார். கமலுடன் பணியாற்றியது, மறக்க முடியாத அனுபவம்.

    என் படங்களில் நடித்து வந்த வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்கும்படி கமலிடம் கேட்டுக்கொண்டேன். அதன்படி, அவர் தேவர் மகன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அது வடிவேலு வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.''

    இவ்வாறு உதயகுமார் கூறினார்.

    "கிழக்கு வாசல்'' படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், "நாம் இருவரும் இணைந்து படம் பண்ணவேண்டும்'' என்று தன் விருப்பத்தை உதயகுமாரிடம் தெரிவித்திருந்தார்.

    அதற்கான சந்தர்ப்பம் 1993-ல் வாய்த்தது. ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர்.

    எந்த மாதிரி கதையை எடுக்கலாம் என்று ரஜினியும், உதயகுமாரும் ஆலோசித்தபோது, "உங்கள் படத்தை நான் இயக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?'' என்று உதயகுமார் கேட்டார்.

    "இரண்டும் ஒன்றுதானே'' என்றார் ரஜினி.

    "இல்லை'' என்றார், உதயகுமார்.

    "எப்படி?'' என்று கேட்டார், ரஜினி.

    "ரஜினி படம் என்பது பார்முலா படம். அதை யாரும் இயக்கலாம். ஆனால், உதயகுமார் பாணி படம் என்றால், நான்தான் இயக்க முடியும்'' என்றார், உதயகுமார்.

    அதற்கு ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே, "ரஜினி ஸ்டைல் கதையையே பண்ணுங்கள்'' என்றார்.

    "ஜில்லா கலெக்டர்'' என்ற கதையை சொன்னார், உதயகுமார். "சரி, எடுக்கலாம்'' என்று ரஜினி சொன்னார்.

    பிறகு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், உதயகுமாரை ரஜினி அழைத்தார். "என் ஸ்டைலில் வேண்டாம்; உங்கள் ஸ்டைலிலேயே படத்தை எடுங்கள்'' என்றார்.

    ஏற்கனவே, "பொன்னுமணி'' என்ற கதையை ரஜினிக்கு உதயகுமார் சொல்லியிருந்தார். "அதை எடுக்கலாமே'' என்று ரஜினி கூற, "அந்தக் கதையை கார்த்திக்கிடம் சொல்லி, அவரை வைத்து எடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன்'' என்றார், உதயகுமார்.

    அதன் பிறகுதான், "எஜமான்'' கதை முடிவானது. இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வேட்டி-சட்டையில் நடித்தார், ரஜினி.

    அவருக்கு ஜோடி மீனா. படம் பெரிய வெற்றி பெற்றது. "என்னால் மறக்க முடியாத படம்'' என்றார், ரஜினி.

    1994 ஏப்ரல் 14-ல் (தமிழ்ப்புத்தாண்டு) வெளிவந்த படம் "பொன்னுமணி.'' கதாநாயகனாக கார்த்திக் நடித்த வெற்றிப்படம்.

    இந்தப் படத்தில்தான் சவுந்தர்யா புதுமுகமாக அறிமுகமானார். முதல் படம் என்று கூற முடியாதபடி சிறப்பாக நடித்தார்.

    இதுபற்றி உதயகுமார் கூறியதாவது:-

    "பொன்னுமணியில் கதாநாயகியாக நடிக்க, முதல் கட்டமாக 3 பேர்களை தேர்வு செய்தோம். அவர்களை நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்திப் பார்த்ததில், இறுதியாக சவுந்தர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவர் டாக்டருக்கு படிக்க வேண்டியவர். குடும்ப சூழ்நிலை காரணமாக நடிக்க வந்தார். அவருடைய நிஜப்பெயர் சவுமியா. அதை "சவுந்தர்யா'' என்று மாற்றினேன். அறிமுகப் படத்திலேயே நல்ல பெயர் வாங்கினார். என்னிடம் கடைசி வரை நன்றி விசுவாசத்துடன் இருந்தார்.

    பெரிய வெற்றிப்படமான பொன்னுமணி, 48 நாட்களில் தயாரிக்கப்பட்டதாகும்.''

    இவ்வாறு உதயகுமார் கூறினார்.

    1995-ம் ஆண்டு பிரபுவின் 100-வது படமான "ராஜகுமாரன்'' படத்தையும், கார்த்திக் நடித்த "நந்தவனத்தேரு'' என்ற படத்தையும், 1997-ம் ஆண்டு நடிகர் அர்ஜ×ன் நடித்த "சுபாஷ்'' என்ற படத்தையும் உதயகுமார் டைரக்ட் செய்தார்.

    1995-ம் ஆண்டு 8-வது உலகத்தமிழ் மாநாட்டிற்காக பண்டைய தமிழ் இலக்கியத்தை வைத்து தமிழக அரசுக்காக "இலக்கியச்சோலை'' என்ற படத்தை எடுத்தார். இந்த படத்தை அரசுக்கு இலவசமாக இயக்கிக்கொடுத்தார்.

    1996-ம் ஆண்டு "சின்னராமசாமி பெரியராமசாமி'' படத்தில் ஜெயராமனுடன் இணைந்து ஆர்.வி.உதயகுமாரும் நடித்தார். அந்தப்படம் சில பிரச்சினைகள் காரணமாக இதுவரை வெளிவரவில்லை.

    1998-ம் ஆண்டு "தாரகராமுடு'' என்ற தெலுங்கு படத்தை டைரக்ட் செய்தார். படத்தில் ஸ்ரீகாந்த், சவுந்தர்யா ஆகியோர் நடித்தனர். தமிழில் "வெள்ளி நிலவே'' என்ற பெயரில் இது வெளியானது.

    2005-ம் ஆண்டு "கற்ககசடற'' என்ற படத்தை டைரக்ட் செய்தார். இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் அறிமுகமானார்.

    உதயகுமாரின் மனைவி பெயர் சுஜாதா.

    இந்த தம்பதிகளின் ஒரே மகளான பூமிகா, மூன்றாம் வகுப்பு மாணவி.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருது பெற்ற உதயகுமார், திரைப்பட மானியக்குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார்.
    Next Story
    ×