தமிழகத்தின் புராதன கோவில்களில் உள்ள பொக்கிஷங்களை மர்ம கும்பல் திருடப்போவதாக வரும் தகவலை தொடர்ந்து போலீஸ் உயரதிகாரியான சரண் ராஜ் தமிழகத்தில் உள்ள சில முக்கிய கோவில்களுக்கு ரகசிய போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்கிறார். அதன்படி போலீஸ்காரரான நாயகன் கிஷோர் ரவிச்சந்திரன் அங்குள்ள சிவன் கோவிலுக்கு காவலாளியாக வருகிறார்.
தம்பி ராமையாவுடன் இணைந்து கோவிலை காவல் காக்கும் போது, அங்கு சில மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன. இதுகுறித்து கிஷோர் ரகசியமாக கண்காணித்து வருகிறார். அங்குள்ளவர்கள் கிஷோரின் பின்புலம் தெரியாமல் அவருடன் சகஜமாக பழகி வருகிறார்கள்.
அதே நேரத்தில் அந்த கோவிலுக்கு அருகே பூ கடை வைத்திருக்கும் அக்கா, தங்கையான நாயகிகள் சிராஸ்ரீ அஞ்சன், நித்யா ஷெட்டி இருவருமே கிஷோரை காதலிக்கிறார்கள்.
கடைசியில், கோவிலில் நடக்கும் மர்ம சம்பவங்களுக்கான காரணம் என்ன? கோவில் பொக்கிஷங்களை கொள்ளையடிக்க முயற்சித்தவர்கள் யார்? அக்கா, தங்கை இருவரில் நாயகனுடன் இணைந்தது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ரகசிய போலீஸ் அதிகாரியாக வரும் கிஷோர் ரவிச்சந்திரன் எல்லா காட்சியிலுமே ஒரே மாதிரியான பாவத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னும் வளர வேண்டும். தங்கையாக நடித்திருக்கும் நித்யா ஷெட்டி காதல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறும்புத்தனமான கதாபாத்திரத்தின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். திருவிழா பாடலில் நடனமாடி கவர்கிறார். அக்காவாக வரும் சிராஸ்ரீ அஞ்சன் கொடுத்த வேலையை செவ்வென செய்துவிட்டு சென்றிருக்கிறார். தம்பி ராமையா தனது வழக்கமான பேச்சால் குறிப்பிட்ட இடங்களில் நகையை உண்டுபண்ணுகிறார்.
சரண் ராஜ், சினி ஜெயந்த், ஹோலோ கந்தசாமி என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
நமது முன்னோர் கட்டிய புராதன கோவில்கள், அதன் பெருமைகள், அதனுள் இருக்கும் பொக்கிஷங்கள் என கோவில்களை மையப்படுத்தியே படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஏ.பி.ஜி.ஏழுமலை. படத்தின் திரைக்கதையின் நீளமும், அதன் போக்கும் ஒருவித சலிப்பை ஏற்படுத்தினாலும், கோவில்களின் பெருமையை கூறியிருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.
சி.சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவு பக்கபலம்.
மொத்தத்தில் `அகவன்' உள்ளிருப்பவன். #Agavan #AgavanReview #KishoreRavichandran #NithyaShetty
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.