இசை உலகத்துக்கே சக்ரவர்த்தியாக விளங்குகிறார் மிருதங்க வித்வான் நெடுமுடி வேணு. அவருக்கு மிருதங்கம் செய்து கொடுக்கும் கிறித்துவ குடும்பத்தை சேர்ந்தவர் ஜி.வி.பிரகாஷ். ஜி.விக்கு இயல்பிலேயே இசை ஞானம் உண்டு. நெடுமுடி வேணுவிடம் மிருதங்கம் கற்க ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் வேணுவும் அவரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்கிறார்.
வேணுவிடம் நீண்ட நாட்களாக இருக்கும் வினீத்துக்கு இது எரிச்சலை தருகிறது. வெளியேறும் வினீத் வேணுவை ஒன்றும் இல்லாமல் ஆக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சிகளை தன் இசையால் வெல்லும் ஜிவி, வேணுவிற்கும் ஒரு பாடம் சொல்கிறார்.
வேம்பு ஐயரின் கர்வத்துக்கும், பீட்டரின் ஏக்கத்துக்கும் நடக்கும் போராட்டமே சர்வம் தாள மயம். இருவருமே கடைசி வரை அதை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து இருப்பது அந்த கதாபாத்திரங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கிறது.
வேம்பு ஐயர் மனதை கவர்ந்து அவரிடம் சிஷ்யனாகிவிட வேண்டும் என்ற துடிப்பை பார்வை, நடை, பாவனை என அனைத்திலும் காட்டி, அடித்தட்டு இளைஞனின் ஏக்கத்தை உணர்த்திவிடுகிறார் ஜி.வி.பிரகாஷ். பீட்டராக லந்து கொடுப்பது, அப்பா கஷ்டப்படுவதை பார்த்து உருகுவது, போதையில் சவால் விடுவது, இரட்டை குவளை முறையை பார்த்து ஆவேசப்படுவது என அவர் நடிப்பில் இந்த படம் ஒரு மைல்கல். நீ கச்சேரி வாசிக்கணும் என்று குரு சொல்லும்போது ஏற்படும் பரவசத்தை அப்படியே நமக்கு கடத்துகிறார். விருதுகளை அள்ள வாழ்த்துகள்.
வேம்பு ஐயராகவே வாழ்ந்து இருக்கிறார் நெடுமுடி வேணு. மேதை என்ற கர்வத்தையும், தகுதியானவனுக்கு தகுதியானது சென்று சேர்ந்துவிட வேண்டும் என்ற தர்மத்தையும் படம் முழுக்க தாங்குகிறார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை உணர்ந்து அவர் திரும்பும் காட்சிகளில் அனுபவ நடிப்பு வெளிப்படுகிறது. அவருக்கும் விருதுகள் குவியும்.
எதிர்மறை கதாபாத்திரம் என்றாலும் அதிலும் நியாயம் செய்து இருக்கிறார் வினீத். அண்ணா, அண்ணா என்று சுற்றும் அவரே வேம்பு ஐயருக்கு எதிராக மாறுவது திரைக்கதை திருப்பம்.
ஜிவி.பிரகாஷின் பெற்றோராக குமரவேல், தெரசா நடுத்தர குடும்பத்தை பிரதிபலிக்கிறார்கள். இயலாமையையும் தொழில்பக்தியையும் இயல்பாக கடத்துகிறார் குமரவேல். அவருக்கும் இது முக்கியமான படம். அபர்ணா பாலமுரளிக்கு அதிக வேலை இல்லை என்றாலும் கொடுத்த பணியை நிறைவாக செய்துள்ளார். தொகுப்பாளினி திவ்யதர்ஷினியை வைத்தே ரியாலிட்டி நிகழ்ச்சிகளை கிண்டல் செய்து இருப்பது கெத்து.
பல ஆண்டுகளுக்கு பிறகு முழுக்க முழுக்க நம் பாரம்பரிய இசை பற்றிய ஒரு படம். அதற்குள் குரு சிஷ்யன் உறவு, சாதி ஏற்றத்தாழ்வுகள், தந்தை மகன் பாசம், டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் டிஆர்பி விளையாட்டு என பல விஷயங்களை சுவாரசியமாகவும் உணர்வுபூர்வமாகவும் அழகாக கோர்த்து திரைப்படமாக்கி இருக்கிறார் ராஜீவ் மேனன்.
இசைக்கு சாதி, மதம், பொருளாதாரம் எதுவும் தெரியாது. அன்பும் அர்ப்பணிப்பும் மட்டுமே இசைக்கான ஆதாரங்கள் என்பதை உணர்த்திய விதத்தில் சர்வம் தாள மயம் தலையில் வைத்து கொண்டாட கூடிய ஒரு படைப்பு. மொத்தத்தில் இசை, திரைக்கதை, நடிப்பு மூன்று துறைகளிலும் நம்மை பரவசப்படுத்தி நெகிழ்ச்சி அடைய வைக்கிறது சர்வம் தாள மயம்.
சிறிது பிசகினாலும் ஆவணப்படம் போல் மாறி இருக்கவேண்டிய படத்தை திரைக்கதையும் நடிகர்களின் நடிப்பும் சுவாரசியமாக்குகின்றன. முதல் பாதி வரை நெகிழ வைக்கும் திரைக்கதை இடைவேளைக்கு பின்னர் சில நிமிடங்கள் எங்கெங்கோ செல்கிறது. குருவுடன் சிஷ்யன் சேர்ந்த பிறகு மீண்டும் வேகம் எடுக்கிறது. பீட்டரின் இசை தேடும் பயணத்தை இன்னும் சுவாரசியமாக்கி இருக்கலாம்.
அவங்களுக்கு தோல் முக்கியம். நமக்கு தொழில் முக்கியம், உங்களுக்கெல்லாம் கவர்மெண்ட் காலேஜ் கோட்டால சீட்டு கிடைக்குமே... இங்கே ஏன் கத்துக்க வர்றே... என வசனங்கள் சமகால சூழ்நிலையை பிரதிபலிக்கின்றன. கல்லுல இருந்து சிற்பம் வரலைன்னா அது சிற்பியோட தப்பு போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.
படத்தின் இன்னொரு கதாநாயகனாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை உயிரோட்டத்தை கொடுத்துள்ளது. லைவ் ரெக்கார்டிங் என்பதை நம்பவே முடியவில்லை. பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கின்றன. ரவி யாதவ்வின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் கச்சிதம்.
மொத்தத்தில் `சர்வம் தாள மயம்' இசையின் வெற்றி. #SarvamThaalaMayamReview #SarvamThaalaMayam #GVPrakashKumar #AparnaBalamurali #NedumudiVenu #Vineeth #RajivMenon #ARRahman
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.