முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அவரின் முன்னாள் ஆலோசகர் சஞ்சய் பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை தழுவி அதே தலைப்பில் சுனில் போரா தயாரிப்பில் விஜய் ரத்னாகர் இயக்கத்தில் அனுபம் கெர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் படம்.
2004-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் ஆகாமல் மன்மோகன் சிங்கை முன்மொழிந்தார். அவர் பிரதமர் பதவி ஏற்ற பிறகு நடந்த சிக்கல்கள், சூழல்கள், எதிர்ப்புகள் பதவிக்காலம் முடிந்து கடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பே இந்த திரைப்படம்.
2004 முதல் 2014 வரையிலான காங்கிரசின் 10 ஆண்டுகால ஆட்சியை பற்றிய படமாகவே இது உருவாகி இருக்கிறது. தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் புத்தகத்தில் 2008 வரையிலான ஆட்சி பற்றி மட்டுமே இருக்கும்.
சஞ்சய் பாரு வேடத்தில் பத்திரிகையாளராக நடித்து இருக்கும் அக்ஷய் கன்னா சொல்வது போல படம் தொடங்குகிறது. படம் முழுக்கவே அவர் சொல்ல சொல்ல காட்சிகள் விரிகின்றன. ஒரு ஆவணப் படம் பார்ப்பது போல் இருக்கிறது. 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதில் இருந்து படம் தொடங்குகிறது.
சோனியா காந்தி பிரதமராவதில் சிக்கல் இருப்பதால் ராகுல் காந்தி பக்குவம் அடையும்வரை, பிரதமர் பதவி மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்படுகிறது. சோனியா காந்தி கட்டுப்பாட்டின் கீழ், கடும் அழுத்தங்களுடன் மன்மோகன் சிங் பணியாற்றுகிறார். படம் முழுவதும் பத்திரிகையாளர் சஞ்சய் பாரு உரையாடிக்கொண்டே அந்தந்த காலகட்ட அரசியல் சூழலை பற்றி விரிவாக பேசுகிறார்.
மன்மோகன் சிங்காக அனுபம் கெர் நடித்திருக்கிறார். இந்தி முன்னணி நடிகரான அவர் 2014-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியின் ஆதரவாளராக மாறினார். அவரின் மனைவி கிரோன் கெர் பா.ஜனதாவில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர்.
மன்மோகன் சிங்கைப் பல இடங்களில் நினைவுபடுத்த முயற்சி செய்து இருக்கிறார். நடை, பேச்சு, பாவனை என அனைத்திலும் மன்மோகன்சிங்கே தெரிகிறார். படத்தில் சில காட்சிகளில் நிஜ மன்மோகன் சிங் வரும் வீடியோக்களை சேர்த்து இருப்பதால், உண்மையான மன்மோகன் சிங்குக்கும், அனுபம் கெரின் மன்மோகன் காட்சிகளுக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. இது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அனுபம் கெர் சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கும் செய்கிறார்.
சோனியாகாந்தி முதல் ப.சிதம்பரம் வரை ஒவ்வொரு கதாபாத்திரமும் சில காட்சிகளில் வந்து செல்கிறார்கள். ஜெர்மனியில் பிறந்த சுசான் பெர்னெர்ட் சோனியா காந்தியாக நடித்திருக்கிறார். எந்த நேரமும் சிடுசிடுவென இருக்கும் முகத்துடன், மன்மோகன்சிங்குக்கு கட்டளை பிறப்பிக்கும் சர்வாதிகாரியாக சோனியா காந்தி காட்டப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தி கதாபாத்திரம் அரசியலில் இறக்கிவிடப்பட்ட பணக்கார வீட்டுப்பிள்ளையாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ரத்னாகர் இயக்கியுள்ளார். ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் பற்றிய வரலாற்று திரைப்படம், பிரதமர் அலுவலகம், சோனியா காந்தி இல்லம் மற்றும் சில பிரபலங்கள் மட்டுமே இடம்பெறும் இடங்களில் நிகழ்வது சலிப்பை தருகிறது.
‘மன்மோகன் சிங் பீஷ்மர் போன்றவர். சோனியா காந்தி குடும்பத்துக்காக எந்த முடிவையும் எடுக்கக் கூடியவர். மகாபாரதத்திலாவது இரண்டு குடும்பங்கள் இருந்தன; துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் ஒரே குடும்பம்தான் இருக்கிறது’ என்று வெளிப்படையாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வெளியாகியுள்ளது இந்தத் திரைப்படம்.
ஆனால் அந்த விமர்சனம் முழுவதும் பிரசார ரீதியில் மட்டுமே இருக்கின்றன. காட்சிப்படுத்துதலில் கோட்டை விட்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியையும், மன்மோகன் சிங் ஆட்சியையும் பற்றி நடுநிலையுடன் இன்னும் ஆதாரங்களுடன் தெளிவாக விமர்சித்து இருக்கலாம். ஆனால் இந்தத் திரைப்படம் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரமாக மட்டுமே உருவாகி உள்ளது. #TheAccidentalPrimeMinisterReview #TheAccidentalPrimeMinister #AnupamKher #SuzanneBernert
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.