சிறிய வயதில் நாம் நிறைய மேடை நாடகங்களை பார்த்திருப்போம். தொழில்நுட்ப வளர்ச்சி, படங்களின் வரவால், மேடை நாடகங்களை அதிகளவில் பார்க்க முடியவில்லை. எனவே நாடக கலைஞர்களின் வாழ்க்கை, கலையின் மீதான அவர்களின் தாகம் எந்த அளவுக்கு இருந்தது, தற்போதும் இருக்கிறது என்பது நிறைய பேருக்கு தெரியாமலே இருக்கும்.
அந்த மாதிரியான ஒரு நாடக கலைஞரின் வாழ்க்கை, அந்த கலையின் மூலமாக ஒரு கலைஞன் மற்றவர்களை மற்றவர்களை எவ்வாறு சந்தோஷப்படுத்துகிறான். கலையின் மீது அவன் காட்டும் ஈடுபாடு, கலைக்கான அவனது சேவை என்னவாக இருக்கும் என்பது படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நடிக்க வருபவர்கள் எல்லோரும் சினிமாவில் நடிகனாக முடியாது. நடிகனாக தேவையான திறமை, தரம் இருந்தால் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும். ஒரு சிறிய காட்சியில் நடிப்பதற்கு கூட கலையின் மீது ஆர்வம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த காட்சி முழுமை பெறும். நடிப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. நடிகன் என்ற வார்த்தைக்குள் கலைஞன் என்ற வார்த்தை அடங்கி உள்ளது. கேமரா முன்னால் நிற்பவர் அனைவரும் நடிகர் கிடையாது. அப்படி சொல்லிக் கொண்டு இருந்தாலும், அவர்கள் பெரியதாக ஜொலிக்க முடியாது. சீக்கிரமாகவே காணாமல் போய் விடுவார்கள்.
கலைக்குள் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஒரு கலைஞன் எவ்வளவு உயர்ந்தவன் என்பது நமக்கு தெரியால் இருந்திருக்கலாம் அல்லது நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு கலைஞனின் உயரத்தை உயர்த்தி கூறியிருப்பதே படத்தின் கதை.
விஜய் சேதுபதி தான் வரும் காட்சிகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு நாடக கலைஞரின் வாழ்க்கையை, அவர்களது திறமையை, அவர்கள் கலையை நேசிப்பதையும், அவர்கள் கலை மீது வைத்திருக்கும் பற்றையும் அழகாக வெளிக் காட்டியிருக்கிறார். அவர் விட்டுச் செல்லும் கலை, அதனுடைய தொடர்ச்சி படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
ராஜ்குமார் தனது ஒவ்வொரு அசைவாலும், பேச்சாலும், பார்வையாலும் ரசிக்க வைக்கிறார். தனது தனித்துவமான நடிப்பின் மூலம் சிரிக்க வைக்கிறார் என்றும் சொல்லலாம். சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் வைபவ்வின் அண்ணனான சுனில் ரெட்டி, படத்தின் இரண்டாவது பாதியை தூக்கிச் செல்கிறார் என்று சொல்லலாம். மௌலி தனது யதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா இயல்பான வருகிறார்கள். பகவதி பெருமாள், கருணாகரன், ரம்யா நம்பீசன், அர்ச்சனா, காயத்ரி, பார்வதி நாயர் என மற்ற கதாபாதத்திரங்கள் அனைவருமே படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றனர்.
ஒரு உச்ச நடிகரை நம்பி படம் பண்ண வேண்டுமென்றால், அவரது தோள் மீதேறி அவருடன் பயணம் செய்தால் தான், மக்களை ரசிக்க வைக்க முடியும் என்பதை தனது தனித்துவமான படைப்பின் மூலம் தகர்த்தெறிந்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். அதற்காகவே அவருக்கு பாராட்டுக்கள். நாம் ஒன்று நினைத்து போக, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புதுமுகங்களுடன் படத்தை ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
நடிகர் யாராக இருந்தாலும், ஒரு கதாபாத்திரத்தை மக்களின் முன் ஜொலிக்க வைக்க என்ன தேவை என்பதை பாலாஜி தரணிதரன் புரிந்து வைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் அதனை நிரூபித்தும் காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். அதனை படத்தின் முடிவில் உணர முடிகிறது. எனினும் விஜய் சேதுபதியின் 25-வது படம் இது என்பதை ஏற்க முடியவில்லை. ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க வெற்றிக் கனியை சுவைத்திருக்கிறார் பாலாஜி தரணிதரன் என்பதை உறுதியாக கூறலாம். இவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதற்கு இந்த படம் போதும். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். இது விஜய் சேதுபதி படம் என்று சொல்வதை விட, பாலாஜி தரணிதரனின் திறமையை வெளிப்படுத்தும் படம் என்பதே நிதர்சனமான உண்மை.
படத்தின் நீளம் ஒரு வித சோர்வை ஏற்படுத்தினாலும், படத்திற்கு அது தேவை என்பதையும் உணர்த்தியிருக்கிறார். அதே நேரத்தில் கதையின் ஓட்டத்திற்கு தடை போடும்படியான சில காட்சிகளை நீக்கியிருக்கலாம்.
கோவிந்த் வசந்தா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. சரஸ்காந்த்.டி.கே.வின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.
மொத்தத்தில் `சீதக்காதி' காவியம். #SeethakkathiReview #Seethakkathi #VijaySethupathi # BalajiTharaneetharan
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.