படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா உள்ளிட்ட நான்கு பேரும் இணைந்து அந்த கொலையை செய்கின்றனர். வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமீர். அவரின் விசுவாசிகளாக சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா நான்கு பேரும் வருகின்றனர்.
ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொண்ட அமீர் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துகிறார். இந்த நிலையில், வடசென்னை இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கேரம் விளையாட்டு கிளப் ஒன்றை ஆரம்பிக்கிறார். கேரம் விளையாட்டின் மீது அதீத ஈர்ப்பு கொண்ட சாதாரண வடசென்னை இளைஞன் தனுஷுக்கு (அன்பு) கேரம் விளையாட்டில் தான் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது. அமீர் அவரை ஊக்கப்படுத்துகிறார்.
இதற்கிடையே அதே பகுதியில் இருக்கும் வாயாடி ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் (பத்மா), தனுஷுக்கும் இடையே அடிக்கடி மோதல் வருகிறது. இருவருக்கும் இடையேயான மோதலே அவர்களுக்கு இடையே காதல் வர காரணமாகிறது.
எம்.ஜி.ஆர். இறக்கும் காலத்தில் நடக்கும் இந்த கதையில், வடசென்னை பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்த திட்டமிடப்படுகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த அமீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறார்.
சமுத்திரக்கனியும், கிஷோரும் காசுக்கு ஆசைப்பட்டு, அமீர் விட்ட தொழிலை மீண்டும் கையில் எடுக்கின்றனர். இதனால் போலீசில் சிக்கும் அவர்களை அமீர் பொது இடத்தில் வைத்து அடித்துவிடுகிறார். தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிதீர்க்க சமுத்திரக்கனியும், கிஷோரும் சேர்ந்து திட்டமிடுகின்றனர்.
இந்த நிலையில், சாய் தீனாவுக்கும், தனுஷுக்கும் இடையே பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனைக்கு பிறகு தனுஷின் கை ஓங்குகிறது.
கடைசியில், வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமீரின் தலைமை என்ன ஆனது? தனுஷ் அந்த ஏரியாவையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா? படத்தின் தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்? சமுத்திரக்கனி, கிஷோர் என்ன ஆனார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை நிரூபித்து வரும் தனுஷ், இந்த படத்திலும் அனைவரும் ஆச்சரியப்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு அதே சாயலில் தனுஷை பார்க்க முடிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷிடம் அடியும், திட்டும் வாங்கும் தனுஷ், எதிரிகளிடம் சண்டை செய்யும் காட்சிகள் ரசிக்க முடிகிறது. தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே வடசென்னை கதாபாத்திரத்திற்கு அப்பட்டமாக பொருந்தி இருக்கிறார்கள்.
காக்கா முட்டை படத்திற்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னையில் வசிக்கும் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. வாயை திறந்தாலே இந்த பொண்ணு உண்மையாவே வடசென்னையா தான் இருக்குமோ என்று யோசிக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது. அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.
அமீர் இதுவரை ஏற்றிராத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். ஒரு டானாக படத்தை தூக்கி நிறுத்துகிறார். சமுத்திரக்கனி, கிஷோர் இருவரும் சமமான கதாபாத்திரத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஆண்ட்ரியா வித்தியாசமான பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்றபடி டேனியல் பாலாஜி, பவன்குமார், கருணாஸ், பாவல் நவகீதன் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராதா ரவி அரசியல்வாதியாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கருணாஸ், சீனு மோகன், சுப்ரமணியன் சிவா, டேனியல் அனி போப் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு வலுசேர்த்திருக்கிறார்கள்.
பொதுவாகவே தனது யதார்த்தமான காட்சிகளின் மூலம் திரைக்கதை நகர்த்துவதில் கைதேர்ந்தவர் இயக்குநர் வெற்றிமாறன். வடசென்னையில் வாழும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்களின் சூழல், பேச்சு, அடிதடி சண்டை, வார்த்தைகள் என அனைத்தும் இயல்பாக அமையும்படி படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும் சிறிது நேரத்தில் காட்சிகள் வேகமெடுப்பது, திரைக்கதைக்கு பலமாகிறது. வசனங்கள் வடசென்னைக்கு சென்று வந்த அனுபவத்தை கொடுக்கிறது.
உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தின் முடிவு, அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டுகிறது. எனினும் அடுத்தடுத்த இதன் இரண்டாம் பாகம் 2019-லும், மூன்றாம் பாகம் 2020-லும் வெளியாக இருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `வடசென்னை' அதகளம். #VadaChennaiReview #Dhanush #AishwaryaRajesh
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.