சிறுமி தித்யா அலாரம் டோன் கேட்டால் கூட துள்ளி குதித்து ஆடிவிடும் அளவுக்கு நடனத்தின் மீது வெறி கொண்ட பள்ளி மாணவியாக இருக்கிறார். ஆனால் அவளது அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ் நடனத்தின் மீது மிகப் பெரிய வெறுப்பு. மகளை நடனத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒதுக்கி வைக்கிறாள்.
அவளது நடனத் திறமையைப் பார்த்து வியப்பாகும் பிரபுதேவா, நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கும் அவளுக்கு எப்படியாவது உதவ நினைக்கிறார். அம்மாவுக்குத் தெரியாமல் டான்ஸ் அகாடமியில் சேரவும், திறமையை வளர்க்கவும் உதவுகிறார் பிரபுதேவா.
நடனம் என்றாலே வெறுப்பாகும் அம்மாவை சமாளித்து தன் திறமையை உலகத்துக்குக் லக்ஷ்மி எப்படிக் காண்பிக்கிறாள் என்பதே படத்தின் கதை. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடனத்தின் மேல் ஏன் அத்தனை வெறுப்பு, பிரபுதேவா யார்? என்பதே மீதிக்கதை.
தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை 'மெர்குரி' படத்தில் நிரூபித்த பிரபுதேவாவிற்கு, இந்தப் படத்தின் கதாபாத்திரம் சாதாரண விஷயமாக அமைந்துவிட்டது. அதிலும் நடனம் என்றால் சொல்லவா வேண்டும். அனைத்து காட்சிகளிலும் யதார்த்தமாக நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிய பாத்திரம் இல்லை என்றாலும் தன் இருப்பை முடிந்த வரை நன்றாகப் பதிவு செய்திருக்கிறார். படத்தின் முதன்மைக் கதாபாத்திரமாக இருந்தாலும், நடனத்தில் மட்டும் திறமையைக் காட்டியிருகிறார் தித்யா, நடிப்பில் இன்னும் கொஞ்சம் முயற்சி தேவை. தன்னைவிட சிறப்பாக நடனமாடும் ஒருவரைப் பார்த்து வியப்படைவதும், வாய்ப்பு மறுக்கப்படும் போது வெறுத்துப் போவதுமாக உணர்வுகளை கடத்தி நடித்திருந்த அர்ஜுன், சின்னச் சின்னக் குறும்புகள் செய்து கவனிக்க வைக்கும் அர்னால்ட் ஆகிய கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தனர்.
நடனத்தை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். நடனத்தில் ஆர்வம் உள்ள சிறுமியின் கதையை முடிந்த அளவு சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அழுத்தமற்ற கதையாக்கம் படத்தின் உணர்வுகள் பார்வையாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சோகம்.
படத்தின் மையம் லக்ஷ்மி கதாபாத்திரம். அவளுக்கு நடனத்தின் மீது ஆர்வம் ஆர்வம் என்பது மட்டுமே காட்டப்படுகிறதே தவிர, எதனால் அவளுக்கு ஆர்வம், ஏன் அவளுக்கு அந்த வெற்றி தேவை என்கிற எந்த விஷயமும் இல்லை. அதனாலேயே எப்படியும் இவள் ஜெயித்துவிடுவாள் என்கிற மிதப்பு வந்துவிடுகிறது. எனவே, அவளுக்கு வரும் தடைகள் நமக்கு எந்த பதற்றத்தையும் உண்டாக்காமல் சென்றுவிடுகிறது.
பரேஷ் ஷிரோத்கர், ரூல் தவ்சன், ஷம்பா நடன அசைவுகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக சாம் சி.எஸ் அமைத்திருந்த பாடல்களும் பின்னணி இசையும் கவனிக்க வேண்டியது. கூடவே நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், கலை இயக்குநர் ராஜேஷும் ஒரு கலர் புல்லான நடனத் திருவிழாவையே கண் முன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக டான்ஸ் ரிகர்சலில், ப்ளாஷ் பேக்கில் வரும் பிரபுதேவாவின் நடனம், கவிதை ஒன்றை ஒலிக்கவிட்டு பிரபுதேவாவுடன் இணைந்து குழந்தைகளும் ஆடும் நடனம் இரண்டும் ரசிகர்களுக்கான அசத்தல் விருந்து. மேலும் பிரபுதேவா மற்றும் எதிரணியின் கோச் இருவருக்குமான உரசலில் இருந்த தீவிரத்தன்மை சுவாரஸ்யமானதாய் இருந்தது.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.