தமிழ்ப்படம் முதல் பாகத்தில் `டி' என்ற வில்லனை கண்டுபிடிக்க போலீசாக வரும் சிவாவுக்கு, தனது பாட்டியை கைது செய்ய வேண்டிய நிலை வர தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்வார். அதன் தொர்ச்சியாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
மதுரையில் கலவரம் நடக்க, அதை கட்டுப்படுத்த சிவாவால் தான் முடியும் என்று, காவல்துறை சிவாவின் உதவியை நாடுகிறது. சமூக நலனை கருத்தில் கொண்டு சிவா கலவரக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேசியே அந்த பிரச்சனையை தீர்த்தும் வைக்கிறார். அவரது இந்த அசாத்திய திறமையை பார்த்து வியக்கும் காவல்துறை, அவரை மீண்டும் பணியில் சேர அழைக்க, சிவா மறுத்துவிடுகிறார்.
இந்த நிலையில், சிவாவின் வீட்டிற்கு ஒரு பார்சல் வருகிறது. அதை அவரது மனைவி திஷா பாண்டே வாங்கி திறக்கும் போது குண்டுவெடித்து இறந்துவிடுகிறார். சிவாவின் பாட்டி நமது குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்று சிவாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். இதற்கிடையே ஐஸ்வர்யா மேனனையும் சந்திக்கிறார். இருப்பினும் தனது மனைவியை கொன்றவனை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக கண்ணீர் மல்க மீண்டும் போலீஸ் வேலையில் சேர்கிறார்.
மீண்டும் போலீசில் சேரும் சிவா, அந்த பார்சலை அனுப்பியது `பி' என்று அழைக்கப்படும் சதீஷ் என்பது தெரிய வருகிறது. சிவாவை மீண்டும் போலீஸ் வேலையில் சேர வைத்து சிவாவை பழிவாங்க வேண்டும் என்பதே சதீஷின் நோக்கம்.
கடைசியில், தனது மனைவியை கொன்ற சதீஷை சிவா பழிவாங்கினாரா? இரண்டாவது திருமணம் செய்தாரா? ஐஸ்வர்யா மேனனுடன் இணைந்தாரா? சிவாவின் போலீஸ் அத்தியாயம் எப்படி முடிந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் சிவா முதல் பாகத்தை போலவே, இந்த பாகத்திலும் தனக்கே உண்டான தனித்துவமான நடிப்புடன், நடனத்துடன், பேச்சுடன், அன்புடன், அடக்கத்துடன், பணிவுடன், கோபத்துடன், சிரிப்புடன், கவலையுடன், காதலுடன், பிரம்மாண்டத்துடன் கலக்கியிருக்கிறார். இந்த பாகத்திலும் சிவாவின் போட்டி நடனம் பிரளயத்தை உண்டுபண்ணும்படியாக இருக்கிறது. அகில உலக சூப்பர் ஸ்டாராகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஐஸ்வர்யா மேனன் அவருக்கு கொடுத்த கதபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக `எவடா உன்ன பெத்தா' பாடலில் அவரது நடனம் ரசிக்கும்படியாக இருக்கிறது. வில்லனாக சதீஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். தசாவதாரம் கமலை விட இந்த படத்தில் சதீஷுக்கு கெட்அப்புகள் அதிகம். அதிலும் அவர் கவர்ந்திருக்கிறார். தொடக்கம் முதல் இறுதி வரை சிவா - சதீஷ் இடையே நடக்கும் அதி தீவிர மோதல் அனைவரையும் கவரும்படியாக இருக்கிறது.
திஷா பாண்டே குடும்ப பெண்ணாக சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். சேத்தன், கலைராணி கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவர்கிறது. நிழல்கள் ரவி, மனோபாலா, சந்தான பாரதி, ஜார்ஜ் படத்தின் ஓட்டத்துக்கு உதவியாக இருந்துள்ளனர்.
தமிழ்ப்படம் முதல் பாகத்தில் நடிகர் சிவா போலீசாக வருவார். அதன் தொடர்ச்சியாக, போலீஸ் அத்தியாயமாக இந்த பாகத்தை உருவாக்கி இருக்கிறார் சி.எஸ்.அமுதன். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் தனது அட்ராசிட்டியை உச்ச நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார் அமுதன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால் என பிரபல நடிகர்கள் ஒருத்தரைது படத்தையும் விட்டுவைக்கவில்லை. படத்தில் முடிவில் முன்னணி நாயகிகளை வைத்து உருவாக்கி இருக்கும் காட்சிகளும் ரசிகர்களை கவரும்படியாகவே இருக்கிறது.
அரசியல் பிரபலங்கள், தொலைக்காட்சி சேனல்கள் என அனைத்தையும் கலாய்த்துள்ளனர். கலாய்ப்பது மட்டுமின்றி, சமூகத்திற்கு தேவையானவற்றை வலியுறுத்துவதும், சமூகத்தில் நடக்கும் குற்றங்களை குத்திக்காட்டும்படியாகவும் சில காட்சிகளை ஆங்காங்கே வைத்திருப்பது சிறப்பு. இவ்வாறாக அனைத்தும் கலந்த கலவையாக, இளைஞர்களுக்கு ஏற்ற படமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இருப்பினும் படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் படம் சிறப்பாக இருக்கும்.
கண்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கோபி அமர்நாத்தின் கேமராவில் காட்சிகள் பல இடங்களை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
மொத்தத்தில் `தமிழ்ப்படம் 2' வச்சி செஞ்ச படம். #TP2 #Tamizhpadam2 #Shiva #IshwaryaMenon
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.