இராமாயண இதிகாசத்தில் இராவணன் சீதையை கடத்திச் சென்றதால் இராமயண யுத்தம் தொடங்கும். யுத்த களத்தில் இராமனின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல், ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக நிற்பார் இராவணன். ஆயுதம் இல்லாமல் இருக்கும் ஒருவரை தாக்குவது போர் தர்மம் அல்ல என்பதால், இன்று போய் நாளை வா இராவணா என்று இராமன் கூறுவார்.
இவ்வாறாக யுத்த களத்தில் இருந்து செல்லும் இராவணன், நாளை விடிவதற்குள் இராமனையும், லட்சுமணனையும் கொன்றுவிட எண்ணி, பாதாள உலகில் சக்கரவர்த்தியாக திகழும் தனது சகோதரர் மயில்ராவணனின் உதவியை நாடுகிறான். தீரா தவம் செய்து மாபெரும் சக்தியை அடைய நினைக்கும் இராவணனின் சகோதரர் இராமனையும், லட்சுமணனையும் கொன்று விடுவதற்கு பதிலாக, தனது தவத்தை முழுமையாக்க இருவரையும் பலிகொடுக்க முடிவு செய்கிறார்.
இந்த விஷயம் இராமனின் விசுவாசியும், இராவணனின் தம்பியுமான விபீஷணனுக்கு தெரியவர, இராமனையும், லட்சுமணனையும் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்து அவர்களுக்கு துணையாக அனுமனையும் இருக்கச் செய்கிறார்.
உருமாறும் சக்தி கொண்ட மயில்ராவணன், விபீஷணன் தோற்றத்தில் வந்து அனுமனை ஏமாற்றி இராமனையும், லட்சுமணனையும் பலிகொடுப்பதற்காக தனது பாதாள உலகத்திற்கு கவர்ந்து செல்கிறான்.
இந்த தகவல் விபீஷணனுக்கு தெரியவர, விடிவதற்குள் ராமன், லட்சுமணனை மீட்க வேண்டும் என்றும், இருவரையும் மீட்பது எளிதான காரியமில்லை என்றும், அதில் பல்வேறு தடங்கல்கள் வரும் என்று கூறி, இருவரையும் மீட்டு வர அனுமனை அனுப்பி வைக்கிறார்.
கடைசியில், பாதாள உலகத்தில் இருக்கும் இராமன் மற்றும் லட்சுமணனை அனுமன் எப்படி மீட்டார்? என்னென்ன இன்னல்களை அனுபவித்தார்? பாதாள உலகின் சக்கரவர்த்தியை அழித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இன்று போய் நாளை வா ராவணா என்று ராமன் கூற, அடுத்த நாளைக்குள் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் எழில் வேந்தன். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சூப்பர் ஹீரோக்களையே தங்களது ரோல்மாடலாக நினைத்துக் கொள்ளும் தற்போதைய தலைமுறை, நமது புராண காவியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இணைந்து இந்த கதையை கார்ட்டூன் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் வகையில் படத்தின் திரைக்கதை ரசிக்கும்படியாக விறுவிறுப்பாக நகர்கிறது.
மொத்தத்தில் `அனுமனும் மயில்ராவணனும்' அனைவரையும் கவர்ந்தார்கள். #AnumanumMayilraavananum
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.