அப்பா, மகன் என கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். கார், ரேடியோ என பழமையான பொருட்களின் மீது அதீத ஆர்வம் கொண்டவராக கார்த்திக்கும், நிகழ்கால வளர்ச்சிக்கு ஏற்ப பாக்ஸராக கவுதம் கார்த்திக்கும் வருகின்றனர்.
ஒருநாள் தனது பத்மினி காரில் வெளியே செல்லும் கார்த்திக் ரெஜினா மீது மோதி விடுகிறார். இதையடுத்து தனது வண்டியை சரிசெய்து கொடுக்கச் சொல்லி கார்த்திக்கின் காரை ரெஜினா எடுத்துச் செல்கிறார். இதையடுத்து அந்த வண்டியை சரிசெய்து ரெஜினாவை திட்டுவதற்காக கவுதம் கார்த்திக் அவளது அலுவலகத்திற்கு செல்கிறார். ரெஜினாவை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வலையில் சிக்குகிறார். உடனடியாகவே தனது காதலையும் ரெஜினாவிடம் வெளிப்படுத்துகிறார். சண்டையில் ஆரம்பிக்கும் இவர்கள் சந்திப்பு, பின்னர் காதலாக மாறுகிறது.
இதுஒருபுறம் இருக்க, கால்டாக்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் மகேந்திரன். சிறந்த சேவை வழங்குவதாக அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அடுத்த வருடம் அந்த விருதை தான் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சந்தோஷ் பிரதாப். ஆனால் அவரது கால்டாக்சியில் சில குற்றச் செயல்கள் நடக்கிறது. அதற்கு மகேந்திரன் அச்சாணி போடுகிறார்.
இந்த நிலையில், மகேந்திரனின் ஸ்பான்சர்ஷிப் மூலம் கவுதம் கார்த்திக் பெங்களூ சென்று பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று திரும்புகிறார். வெற்றி களிப்பில் இருக்கும் கவுதம் கார்த்திக்கிடம், எதையோ சொல்ல முயற்சி செய்கிறார் கார்த்திக். அதற்காக இருவரும் காரில் வெளியே செல்கின்றனர்.
அப்போது, அவர்கள் கார் மீது லாரி ஒன்று மோதுகிறது. அந்த விபத்தில் கார்த்திக் இறந்துவிடுகிறார். கவுதம் கார்த்திக்குக்கு கண்ணிற்கு செல்லும் நரம்பு அறுந்து, பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. இந்த நிலையில், வரலட்சுமி பற்றிய அதிர்ச்சியளிக்கும்படியான போஸ்ட் ஒன்று கவுதம் கார்த்திக் வீட்டிற்கு வருகிறது.
அது என்ன போஸ்ட்? வரலட்சுமி யார்? அவளுக்கு என்ன ஆனது? கார்த்திக் உயிரிழப்பு இயற்கையானதா? வரட்சுமிக்கும், கார்த்திக் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல் காட்சிகளில் துறுதுறுவெனவும், அப்பாவை இழந்து தவிக்கும் காட்சியில் கவர்ந்தும் ரசிக்க வைத்திருக்கிறார். ரெஜினா தைரியமான பெண்ணாக வந்து கவர்கிறார். ஏதேதோ ஆனேனே பாடலில் ஓரளவுக்கு கவர்ச்சியுடன் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டியிருக்கிறார்.
கார்த்திக்குக்கு தீனி போடும் கதாபாத்திரமாக, இது அமையவில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும், கார்த்திக் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார்.
கார்த்திக்குக்கு சமமான கதாபாத்திரத்தில் வரலட்சுமி ஸ்கோர் செய்திருக்கிறார். வரலட்சுமி தனது கதாபாத்திரத்தை முதிர்ச்சியான நடிப்புடன் மெருகேற்றியிருக்கிறார்.
இந்த படத்தை பொறுத்தவரை சதீஷ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் அவர் அடிக்கும் கவுண்டரும் பெரிதாக எடுபடவில்லை. காமெடி இருக்கும் என நினைத்து போனால் ஏமாற்றம் தான்.
இயக்குநர் திருவை பொறுத்தவரையில், மாறுபட்ட கதையின் மூலம் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் மனோநிலை ஒரே மாதிரியாகவே இருக்கிறது. சிரிப்பு, காதல், சண்டை, சோகம் என மாறுபட்ட உணர்ச்சிகள் இல்லாமல் கதை எதிர்பார்த்த அளவிற்கு சுவாரஸ்யம் இல்லாமல் அடுத்தடுத்த காட்சிகள் நகர்கிறது.
சாம்.சி.எஸ். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.