அரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கும் சரத்குமாரின் மகன் மகேஷ் பாபு. மக்கள் பிரச்சனைகளுக்கு செவிசாய்க்கும், சரத்குமாரால், தனது மனைவி, மகனுடன் நேரம் செலவிட முடியவில்லை. சிறுவயதில் இருந்தே மகேஷ் பாபு, அப்பா பாசத்திற்காக ஏங்குகிறார். இப்படி இருக்க மகேஷ் பாபுவின் அம்மாவும் இறந்துவிடுகிறார்.
இதையடுத்து தனது மகனுக்காக அரசியல் வேலைகளை சரத்குமார் தள்ளிவைக்க, சரத்குமாரின் நெருங்கிய நண்பனும், அவரது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரகாஷ்ராஜ் மகேஷ் பாபுவுக்காக, சரத்குமாரை புதிய திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். சரத்குமாரும் இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். தனது அம்மாவை இழந்து அம்மா பாசத்திற்காக ஏங்கும் மகேஷ் பாபுவின் சித்தி, அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து பக்கத்து வீட்டில் இருக்கும் தனது நண்பனுடனேயே நேரத்தை செலவிடுகிறார். மேலும் தனது நண்பனின் வீட்டில் லண்டன் செல்ல முடிவெடுக்க, அவர்களுடன் மகேஷ் பாபுவும் லண்டன் செல்கிறார். படிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்ட மகேஷ் பாபு ஐந்துக்கும் மேற்பட்ட பட்டங்களை பெறுகிறார். இந்த நிலையில், தனது தந்தை இறந்த செய்தியறிந்து, பல வருடங்களுக்கு பிறகு மகேஷ் பாபு மீண்டும் சென்னை திரும்புகிறார். அவர் வருவதற்கு முன்பே சரத்குமாருக்கு இறுதிச்சடங்குகள் முடித்து வைக்கப்படுகிறது.
முதலமைச்சராக இருந்த சரத்குமார் இறந்ததால், அவரது கட்சிக்குள் உட்பூசல் ஏற்பட, யார் முதல்வராவது என்பதில் குழப்பமும், பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில், மகேஷ் பாபு மீண்டும் லண்டன் செல்ல தயாராகிறார். அவரை சென்னையிலேயே தங்க சொல்லி பிரகாஷ் ராஜ் வற்புறுத்துகிறார். மேலும் கட்சி உறுப்பிகர்களை சமாளிக்க, மகேஷ் பாபுவை வற்புறுத்தி முதல்வராக்குகிறார் பிரகாஷ் ராஜ்.
முதல்வராக பொறுப்பேற்ற முதலே தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக களையெடுக்க ஆரம்பிக்கிறார். இதற்கிடையே நாயகி கியாரா அத்வானியை சந்திக்கும் மகேஷ் பாபுவுக்கு அவள் மீது காதல் வருகிறது.
மகேஷ் பாபு தான் சொல்வதை கேட்டு அனைத்தையும் செய்வார் என்று பிரகாஷ் ராஜ் நினைத்த நிலையில், எது சரியோ அதை மட்டுமே செய்யும் மகேஷ் பாபு மீது பிரகாஷ் ராஜுக்கு கோபம் வருகிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளும் மகேஷ்பாவுக்கு எதிராக சதி செய்கின்றன.
கடைசியில், எதிர்க்கட்சிகளின் சதியை மகேஷ் பாபு சமாளித்தாரா? கோபத்தில் இருந்த பிரகாஷ் ராஜ் என்ன செய்தார்? தமிழக மக்களின் பிரச்சனைகளை மகேஷ் பாபு தீர்த்து வைத்தாரா? முதல்வராக நீடித்தாரா? கியாரா அத்வானியை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒரு இளம் முதல்வராக, மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருக்கிறார் மகேஷ் பாபு. முதல்வராக இருக்கும் மகேஷ் பாபு, தனது காதலை வெளிப்படுத்துவதும், நாயகியுடன் பழக நினைக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். ஏற்கனவே தோனி படத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கியாரா அத்வானி, இந்த படத்தின் மூலம் மேலும் கவர்ந்திருக்கிறார். காதல் காட்சிகளில் ஈர்க்க வைக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியுடன் கவர்கிறார்.
சரத்குமார் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கு வசனங்கள் குறைவு என்றாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் அந்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார்.
பி.ரவிசங்கர், அஜய், அனிஷ் குருவில்லா, பூசாணி கிருஷ்ண முரளி, ராவ் ரமேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.
மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் ஒருவர் முதல்வரானால் என்ன செய்வார், மக்களின் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைப்பார், இந்த மாதிரி ஒரு முதல்வர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் நினைக்கும் ஒரு முதல்வராக மகேஷ் பாபுவின் கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் கொரதலா சிவா. அதேநேரத்தில் தமிழக அரசியலையும் ஆங்காங்கே கலாய்த்து, பாசம், காதல், சண்டை என அனைத்தும் கலந்து கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார். முதல்வன் படத்தின் புதிய வெர்ஷனை பார்த்த ஒரு அனுபவத்தை கொடுக்கும் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ரவி கே.சந்திரன், எஸ்.திரு ஒளிப்பதிவில் காட்சிகள் அற்புதமாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `பரத் எனும் நான்' முதல்வன். #BharathEnnumNaan #MaheshBabu
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.