நேர்மையான அரசு அதிகாரியின் மனைவி ஜெயப்பிரதா. சில சூழ்ச்சி காரர்களால் இவரது கணவர் ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராதவிதமாக திடீரென இறந்துவிடுகிறார். கணவரின் கடைசி ஆசைக்கேற்ப சொந்த கிராமத்திற்கு செல்கிறார் ஜெயப்பிரதா.
இவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞனின் மனைவியான பார்வதி நம்பியாரும் செல்கிறார். இவர்கள் போகும் இடத்தில் மக்கள் தண்ணீரின்றி தினந்தினம் செத்து மடிவதைக் கண்டு மனம் வருந்துகிறார் ஜெயப்பிரதா. அதே நேரத்தில் தன் வீட்டுத் தோட்டக் கேணியில் வற்றாத நீர்வளம் இருப்பதைக் காண்கிறார்.
தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் அந்த ஊர் மக்களுக்காக கேணியில் இருக்கும் தண்ணீரை தர முடிவெடுக்கிறார். அதன் பின்னர் தான் அந்தக் கேணிக்குப் பின்னால் இருக்கும் எல்லைப் பிரச்சினையும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சியும் இருப்பது ஜெயப்பிரதாவிற்கு தெரிகிறது.
ஆனால் மக்களின் தாகத்தைப் போக்கியே ஆக வேண்டும் என்று தீவிரமாக களமிறங்குகிறார் ஜெயப்பிரதா. இதற்கு பல தடைகள் வருகிறது. இதில் ஜெயப்பிரதா வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் இந்திரா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் ஜெயப்பிரதா. இவருடைய அனுபவ நடிப்பால் படம் முழுவதையும் தாங்கி பிடித்திருக்கிறார். பல இடங்களில் இவருடைய நடிப்பு ரசிக்கும் படி இருக்கிறது. இவர் கண்கலங்கும் போது, நமக்கே அந்த உணர்வை கொடுத்து விடுகிறார்.
பஞ்சாயத்து தலைவராக இடையிடையே வந்து நியாயம் பேசி, குறும்புத்தனமான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார் பார்த்திபன். வக்கீலாக வரும் நாசர், கலேக்டர் ரேவதி, ஊர் மக்களில் ஒருவராக வரும் அனு ஹாசன், நீதிபதி ரேகா, ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு மிகவும் உதவி இருக்கிறார்கள். ஜெயப்பிரதாவுடன் படம் முழுவதும் பயணிக்கும் பார்வதி நம்பியாரின் நடிப்பு சிறப்பு. கணவனை பிரிந்து தவிப்பது, தன் மீது ஆசைப்படும் போலீசின் வலையில் இருந்து தப்பிப்பது என நடிப்பால் கவர்ந்திருக்கிறார்.
டீக்கடையில் வெட்டியாக பேசும் சாம்ஸின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதுபோல் டீ மாஸ்டராக வரும் பிளாக் பாண்டியும் காமெடியில் துணை நின்றிருக்கிறார்.
தமிழ்நாடு - கேரளா எல்லைப் பங்கீட்டினை அடிப்படையாகக் கொண்டு படக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.நிஷாத். கேணியில் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதற்காக இருமாநில காவல்துறையையும் பாதுகாப்பிற்காக நிறுத்தும் போது, முல்லை பெரியாறு அணை பிரச்சனை ஞாபகம் வருகிறது.
படத்தின் இயக்குனர் எம்.ஏ.நிஷாத் ஒரு மலையாளி. படத்தைத் தயாரித்திருக்கும் சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இருவருமே மலையாளிகள். இப்படி மலையாளிகளால் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் தமிழர்களுக்கான உரிமையைப் பேசுவது சிறப்பு. சண்டைகளில்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் அழகாய் ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மனிதனின் வாழ்வாதாரமாய் விளங்கும் தண்ணீரையும் எப்படி அரசியல் படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார்.
தாஸ் ராம் பாலாவின் வசனம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பல வசனங்கள் பட்டாசு போல் வெடித்திருக்கிறது. ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் நௌஷாத் ஷெரிப். பச்சைப் பசேலென இருக்கும் பூமியையும், வறண்டு வெடித்துக் கிடக்கிற பூமியையும் அழகாக நம் கண்முன் நிறுத்திருக்கிறார்.
ஜெயச்சந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. அதிலும் ‘ஐய்யா சாமி...’ பாடல் தாளம் போட வைக்கிறது. ‘கலையும் மேகமே...’ பாடல் முணுமுணுக்கும் ரகம். சாம்.சி.எஸ் பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.