ஆந்திராவில் உள்ள மலைக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. களவாடுவதையே தொழிலாக கொண்டுள்ள அந்த ஊர் மக்கள், அதிலும் சில விதிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஒருவரை துன்புறுத்தி, கொடுமை செய்து களவு செய்யக்கூடாது என்பதில் அந்த ஊர் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் மற்றும் ராஜ்குமார் தமிழ்நாட்டுக்கு வந்து கொள்ளையடிக்கின்றனர்.
இவ்வாறாக திருடி வரும்போது, ஒருநாள் நாயகி நிகாரிகாவின் போட்டோவை ஒருவீட்டில் பார்க்கிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து நிகாரிகாவை பற்றிய விவரங்களை சேகரிக்கிறார். அதில் நாயகி ஒரு கல்லூரியில் படித்து வருவது தெரிந்து அங்கு செல்கிறார்.
இதற்கிடையே நிகாரிகாவுக்கும், அவள் படிக்கும் கல்லூரியில் சீனியராக வரும் கவுதம் கார்த்திக்குக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்நிலையில், அங்கு வரும் விஜய் சேதுபதி நிகாரிகாவை கடத்தி தன்னுடைய கிராமத்திற்கு கடத்தி செல்கிறார். தனது காதலியை மீட்கும் முயற்சியில் இறங்கும் கவுதம் கார்த்திக், டேனியலையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு அந்த கிராமத்திற்கு செல்ல முயல்கிறார்.
கடைசியில் கவுதம் கார்த்திக் நிகாரிகாவை மீட்டாரா? விஜய் சேதுபதி ஏன் நிகாரிகாவை கடத்தினார்? அவருக்கும், நிகாரிகாவுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
களவாணியாக விஜய் சேதுபதி விறைப்பாக நடித்திருக்கிறார். ரமேஷ் திலக், ராஜ் குமாருக்கு இடையேயான காமெடிக்கு நடுவே விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றமும், அவரது உடற்மொழியும் மிடுக்காக இருக்கிறது. வித்தயாசமான கெட்டப்களில் வந்து ரசிக்க வைக்கிறார். கவுதம் கார்த்திக் ஒரு கூலான மாணவனாக, வெகுளித்தனத்துடன் வந்து ரசிக்க வைக்கிறார். கவுதம் கார்த்திக் - டேனியல் இணையும் காட்சிகள் காமெடியின் உச்சகட்டம்.
கொடுத்த கதாபாத்திரத்தை பிசிறின்றி பதிவு செய்திருக்கிறார் காயத்ரி. நிகாரிகா அழகு தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார். அவரது துணிச்சலும், பாவனைகளும் ரசிகர்கர்களுக்கு விருந்தாக அமைகிறது. ரமேஷ் திலக், ராஜ்குமார் இணைந்து செய்யும் காமெடியை ரசிக்கும்படியாக இருந்தாலும், மேலும் ரசிக்க வைத்திருக்கலாம். டேனியல் மனதில் நிற்கும்படியாக காமெடியில் கலக்குகிறார்.
மலைக்கிராமத்தில் வாழ்ந்து கொண்டு களவு தொழில் செய்து வரும் நாயகன், நகரத்துக்கு வந்து இங்குள்ள நாயகியை கடத்திச் செல்லும்படியாக கதையை நகர்த்தினாலும், அதிலும் ஒரு பிளாஸ்பேக் வைத்து வழக்கமான ஒன்றாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆறுமுககுமார். படத்திற்கு முக்கிய பலமே காமெடி தான். அந்த காமெடிக்காக படக்குழு கடுமையாக உழைத்திருந்தாலும், காமெடியை மேலும் வலுப்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. மற்றபடி படம் மசாலா கலந்து காட்டப்பட்டுள்ளது சிறப்பு.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது. பின்னணி இசையும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' எல்லா நாளும் நன்நாளே.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.