சென்னையில் உள்ள குப்பம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கொலைகாரக் குப்பம் என்று பெயர் வாங்கியிருக்கும் அந்த குப்பத்தில் உள்ள மக்கள் அனைவரும், அந்த குப்பத்தின் ரவுடியான பிரகாஷ்ராஜின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். பிரகாஷ் ராஜின் பேச்சைக் கேட்டு கொலை உள்ளிட்ட தவறான வழிகளிலும் செல்கின்றனர். அதிலும் சிவகார்த்திகேயனின் நண்பனான விஜய் வசந்த், பிரகாஷ் ராஜ் உடனே இருந்து அவர் சொல்வதை செய்து வருகிறார்.
இந்நிலையில், தனது குப்பத்தின் நிலையை மாற்றி அங்குள்ள அனைவரையும் நல்ல வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யும் சிவகார்த்திகேயன், அந்த குப்பத்திற்கு மட்டும் கேட்கும் எப்.எம். ஒன்றை வடிவமைக்கிறார். அதில் அந்த குப்பத்து மக்களின் பிரச்சனை என்னவென்பதை தனது குப்பத்து ஜனங்களின் மூலமாகவே உணர்த்தி, அவர்களை தொழில் செய்ய வைக்கிறார். அதேநேரத்தில் தனது குடும்ப கஷ்டத்தால் தானும் பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்கிறார்.
பகத் பாசிலிடம் இருந்து தொழிலை கற்றுக் கொள்ளும் சிவகார்த்திகேயன், தனது நண்பன் விஜய் வசந்தையும் அதே கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். இந்நிலையில், விஜய் வசந்த், பிரகாஷ் ராஜால் கொலை செய்யப்படுகிறார். இதையடுத்து பிரகாஷ் ராஜை பிடித்து கேட்கும் சிவாகார்த்திகேயனிடம், அவர் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி தான் விஜய் வசந்தை கொலை செய்ய சொன்னதாக கூறுகிறார்.
மேலும் தான் கூலிக்கு கொலை செய்பவன் தான். அதேபோல் நீங்களும் அவர்களிடம் கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரர்கள் தான் என்று பிரகாஷ் ராஜ் கூற, அதற்கான அர்த்தம் புரியாமல் இருக்கும் சிவாவிடம் பிரகாஷ்ராஜ் அவர்கள் செய்யும் வேலையையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் விளக்குகிறார்.
இதையடுத்து தன்னுடன் வேலை பார்க்கும் வேலைக்காரர்கள் மூலம், தானும் ஒரு வேலைக்காரனாக சிவகார்த்திகேயன், மக்களுக்கு எதிரான பிரச்சனையை எப்படி எதிர்கொண்டார்? அதில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? கடைசியில் வேலைக்காரன் எப்படி வென்றான்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
தொடக்கத்தில் தனது குப்பத்து மக்களுக்காக போராடும் வேலைகாரனாகவும், பின்னர் நாட்டு மக்களுக்காக போராடும் வேலைக்காரனாகவும் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்திருக்கிறார். ஹீரோயிசம் இன்றி சாதாரண குப்பத்து இளைஞனாக, இயல்பாக நடித்திருப்பது சிறப்பு. சிவகார்த்திகேயன் படம் என்றாலே அது காமெடி கலந்துதான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் வகையில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. பாடல் காட்சியிலும், ஆக்ஷன் காட்சியிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார் என்று கூறலாம்.
படத்தின் இரண்டாவது பாதியில் இருந்து வந்தாலும், பகத் பாஷில் வரும் காட்சிகளும், எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல், பேசாமல் இருக்கும் அவரது நடிப்பும், புயலுக்கு பின் அமைதி என்பதை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. நயன்தாரா வழக்கம் போல வந்து ரசிக்க வைக்கிறார். சிவகார்த்திகேயனை காதல் செய்யும் காட்சிகள் ஏற்கும்படியாகவே இருக்கிறது.
குப்பத்து ரவுடியாக வந்தது பிரகாஷ் ராஜ் மிரட்டிச் செல்கிறார். இதுவரை ஏற்காத புதுமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் சினேகாவுக்கு இப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதை அவரது ஸ்டைலில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். விஜய் வசந்த்தின் நடிப்பு பேசும்படியாக இருக்கிறது. படத்தின் சீரியசுக்கு நடுவே ரோபோ சங்கர் அவ்வப்போது வந்து காமெடியில் சிரிக்க வைக்கிறார்.
மற்றபடி தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதபாத்திரத்தில் வந்து ரசிக்க வைக்கின்றனர். சிவகார்த்திகேயனின் அப்பா, அம்மாவாக சார்லி, ரோகிணி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன் ராஜாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனை அவர் ஈடுகட்ட இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. தனி ஒருவன் படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையான மருத்துவ பின்னணியில் நடக்கும் ஊழலை சுட்டிக் காட்டிய ராஜா, இந்த படத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படமாக இருக்கும் நஞ்சு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை நேர்மறையாக சுட்டிக்காட்டிருக்கிறார். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு தனி ஒருவனாக, ஒரு வேலைக்காரனாக மோகன் ராஜாவின் கதையும், திரைக்கதையும் படத்தை முன்னெடுத்து செல்கிறது.
சமூகத்தின் முக்கிய பிரச்சனையை வைத்து கதையை கொண்டு சென்றாலும், ஆங்காங்கு சிறிது மசாலா சேர்த்திருக்கலாமோ என்று தோன்றும்படியாக இருக்கிறது. வேலைக்காரன் ஒருவன் தனது கம்பெனிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், அதற்காக மக்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது என தன்னுடன் வேலைபார்க்கும் வேலைகாரர்களை கொண்டு போராடும்படியாக படம் சிறப்பாகவே வந்திருக்கிறது.
பின்னணி இசையில் அனிருத் பட்டைய கிளப்பியிருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது. குறிப்பாக கருத்தவலெ்லாம் கலீஜாம் பாட்டுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.