மேலும் தனது இந்த நிலைக்கு போலீஸ் அதிகாரியாக இருக்கும் அவரது காதலி தான் காரணம். அவள் அளித்த தகவலின்படி தான் போலீசார் சுட்டதாக நினைத்து எலோடி யங்கை விட்டுப் பிரிகிறார். இது ஒருபுறம் இருக்க சோவித் யூனியனில் அதிபராக இருக்கும் கேரி ஓல்ட்மேன் சர்வதியாகாரியாக ஆட்சி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு பதவியில் இருந்து இறக்கப்படுகிறார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.

கேரி ஓல்ட்மேனுக்கு எதிராக சாட்சி சொல்ல பல கொலைகளை செய்துவிட்டு சிறைதண்டனை அனுபவித்து வரும் சாமுவேல் ஜாக்சனை போலீசார் அணுகுகின்றனர். அவர் அதற்கான ஆதராங்களை வெளியிட்டால், சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாமுவேல் ஜாக்சனின் மனைவியான சல்மா ஹயக்கை விடுதலை செய்வதாக சொல்ல, அவர் அதற்கு ஒப்புக் கொள்கிறார். இதையடுத்து எலோடி யங்கின் குழுவுடன் பாதுகாப்பாக சாமுவேல் ஜாக்சனை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.
நீதிமன்றத்திற்கு அவரை கொண்டு செல்லும் வழியில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் சாமுவேல் ஜாக்சன், எலோடி யங்கை தவிர்த்து மற்ற அனைவரும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். சாமுவேல் ஜாக்சன் காலில் குண்டுக்காயம் பட்ட நிலையில் இருக்க தனது முன்னாள் காதலனான ரயான் ரெனால்ட்ஸை, எலோடி யங் உதவிக்கு அழைக்கிறாள். அவளுக்கு உதவி செய்தால் அவர் இழந்த பதவியை மீண்டும் பெற தான் உதவுவதாக கூற ரயான் உதவிக்கு வருகிறார்.

இதையடுத்து உதவ முன்வரும் ரயான், சாமுவேல் ஜாக்சனை பார்த்த உடனேயே அவருடன் சண்டைபோடுகிறார். அவரை பலமுறை கொல்ல முயற்சித்திருப்பதாகவும் கூறுகிறார். இதையடுத்து சாமுவேல் ஜாக்சனை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்படி ரயானிடம், எலோடி யங் கூறிவிட்டு செல்கிறார்.
ரயான், சாமுவேல் ஜாக்சன் செல்லும் வழியில் எல்லாம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மேலும் இருவரும் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் குறித்த பேசி வரும் போது, சாமுவேல் ஜாக்சனிடம், எலோடி யங்கை பிரிந்தது குறித்து ரயான் கூறுகிறார். இதையடுத்து அவரது பாதுகாப்பில் இருந்த பிரபலமானவரை சுட்டுக் கொன்றது எலோடி யங் அல்ல என்றும், தானே அவரை சுட்டுக் கொன்றதாகவும் சாமுவேல் ஜாக்சன் கூறுகிறார். இதையடுத்து சாமுவேல் ஜாக்சனிடம் கோபித்துக் கொண்டு ரயான் சென்று விடுகிறார்.

கடைசியில் சாமுவேல் ஜாக்சன் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பாக சென்று சேர்ந்தாரா? கோபித்துக் கொண்டு சென்ற ரயான், அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றாரா? ரயான் தனது தவறை உணர்ந்தாரா? ரயான் ரெனால்ட்ஸ் - எலோடி யங் மீண்டும் இணைந்தார்களா? அதிபர் கேரி ஓல்ட்மேனுக்கு தண்டனை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பாதுகாப்பு அதிகாரியாகவும், காதலனாகவும், காதலியை பிரிந்து தனது தவறை உணரும் கதாபாத்திரத்தில் ரயான் ரெனாலட்ஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுக்க சாமுவேல் ஜாக்சனுடன் இணைந்து அவர் அடிக்கும் லூட்டியும் ரசிக்கும்படி இருந்தது. படத்தில் நாயகனை விட சாமுவேல் ஜாக்சனின் கதாபாத்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது நடையும், பாவனையும், பேச்சும் ஒவ்வொன்றுமே ரசிக்கும்படி இருக்கிறது. ஒரு காரியத்தை செய்யலாம் என்று மற்றவர்கள் யோசிக்கும் முன்னரே அதனை அசால்ட்டாக செய்துவிடும் சாமுவேல் ஜாக்சன் முதிர்ச்சியான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேட்கும் கதாபாத்திரத்தில் சாமுவேல் ஜாக்சன் நடித்திருக்கிறார்.

எலோடி யங் ஒரு போலீஸ் அதிகாரியாகவும், காதலியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பதற்றமான காட்சிகளில் ரயான் வழியும் போது அவரிடம் கோபப்படும் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. கேரி ஓல்ட்மேன் அதிபராக, வில்லத்தனத்துடன் நடித்திருக்கிறார். சாமுவேல் ஜாக்சன் - சல்மா ஹயாக் இடையே நடக்கும் உரையாடலில் சல்மாவின் நடிப்பு முதிர்ச்சியை காட்டுகிறது.
ஆக்ஷனுடன், காமெடியையும் சேர்ந்து இயக்கி பேட்ரிக் ஹக்ஸ் ரசிக்க வைத்திருக்கிறார். திரைக்கதையை அதற்கேற்ப அமைத்திருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. குறிப்பாக ரயான், சாமுவேல் ஜாக்சன் கூட்டணி படத்திகே பலத்தை கூட்டியிருக்கிறது. ஒரு பரபரப்பான காட்சியிலும் சாமுவேல் ஜாக்சன் செய்யும் குறும்பு, காமெடி ரசிக்கும்படி இருக்கிறது.
ஜுல்ஸ் ஓ லவ்லினின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. அட்லி ஒர்வர்சோன் இசையில் பின்னணி இசை சிறப்பு. தமிழ் டப்பிங்குக்கு ஏற்ப வசனங்கள் எழுதியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `தி ஹிட்மேன்ஸ் பாடிகார்டு' அதிரடி காமெடி சரவெடி