ஆதியும், விக்னேஷும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆதிக்கு சிறவயதிலேயே இசை மீது ஈர்ப்பு இருப்பதை அறிந்த விவேக், ஆதிக்கு ஒரு கீ-போர்டை பரிசாக வழங்குகிறார். அதுமுதல் ஆதி - விக்னேஷ் இருவருமே அந்த கீ-போர்டு இல்லாமல் இருப்பதில்லை. இவர்களுடைய இசைப்பயணம் இதுமுதல் ஆரம்பமாகிறது.
இதுஒருபுறம் இருக்க, தன்னுடன் பள்ளியில் படித்து வரும் ஆத்மிகா மீது ஆதிக்கு ஈர்ப்பு வருகிறது. இந்நிலையில், ஆத்மிகா வேறு பள்ளிக்கு சென்று விடுகிறார். வெகுநாட்களாக ஆத்மிகாவை சந்திக்காத ஆதி, தனது பள்ளிப்பருவத்தை முடிக்கும் நிலையில் ஆத்மிகாவை மீண்டும் சந்திக்கிறார். பின்னர் ஆத்மிகா மீது இருந்த ஈர்ப்பு, காதலாக மாறுகிறது. தனது பள்ளிப் படிப்பை முடிக்கும் தருணத்தில் தனது விருப்பத்தை ஆத்மிகாவிடம் தெரிவிக்க முயற்சி செய்கிறார். இந்நிலையில் ஆதி, ஆத்மிகா பின்னால் சுற்றுவதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து சண்டை பிடிக்க, இந்த பிரச்சனை காவல் நிலையம் வரை செல்கிறது.
இதையடுத்து ஆதி வீட்டில் இருந்தால் மேலும் ஏதாவது பிரச்சனை கிளம்பும் என்பதால், ஆதியை கல்லூரி விடுதியிலேயே சேர்த்து விடுகிறார் விவேக். ஆதியின் நண்பன் விக்னேஷும் அதே கல்லூரியிலேயே சேர்கிறார். இந்நிலையில், அதே கல்லூரியில் படித்து வரும் ஆத்மிகாவை பார்க்கும் ஆதிக்கு சந்தோஷத்தின் உச்சத்திற்கு செல்கிறார். பின்னர் இவர்களது ஈர்ப்பு அதிகமாகி, பின்னர் அது காதலாகவும் மாறிவிடுகிறது.
இதனுடன் தனது இசை ஆர்வத்தையும் வளர்த்து வரும் ஆதி, பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். பின்னர் கல்லூரி படிப்பை முடிக்கும் போது, ஆதியின் வாழ்க்கை குறித்து விவேக் கேட்கும் போது, சென்னை சென்று தான் இண்டிபெண்டன்ட் இசையில் சாதிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆதியின் முடிவுக்கு விவேக் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆதியின் ஆசைப்படி செல்ல அனுமதிக்கும் விவேக், ஆதிக்கு ஒரு வருடமே அவகாசம் அளிக்கிறார். அந்த ஒரு வருடத்தில் இசையில் வெற்றி பெறாவிட்டால் தனது விருப்பப்படி மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிறார் விவேக்.
இந்நிலையில், சென்னை வரும் ஆதி, என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்? எப்படி வெற்றி பெற்றார்? அவரது காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல்கள், நடிப்பு என அனைத்தையும் தனது முதல் படத்திலேயே சிறப்பாக கையாண்டிருக்கிறார். அவரது இசை எப்படி இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அதையும் தாண்டி நடிப்பிலும் தன்னால் சாதிக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். இந்த படம் அவருடைய சொந்த வாழ்க்கையின் தழுவலே என்பதால், அந்த கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இயக்குநராக இருந்தும், தனது கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல், கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது. நடினத்திலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.
ஒரு அப்பாவாக, தமிழ் பற்றாளனாக விவேக்கின் கதாபாத்திரம் படத்திற்கே ஒரு உந்துகோலாக இருக்கிறது. அதற்கேற்றாற் போல் அவரது நடிப்பும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக அவர் பேசும் வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது.
முதல் படம் போல இல்லாமல் ஆத்மிகாவும் நடிப்பில் கலக்கியிருக்கிறார். ஆதியுடனான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. அதேபோல் அனந்த்ராம், விக்கேஷ், கோபி அரவிந்த், அன்பு, துனியா சுதாகர் உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் பலரும் இயல்பான நடிப்பால் கவர்கின்றனர்.
ஒரு புதுமுக இயக்குநர் போல இல்லாமல் காட்சிகளில் கைதேர்ந்தவராக ஆதி கலக்கியிருக்கிறார். குறிப்பாக திரைக்கதை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. நடிகர், நடிகைகள் தேர்விலும் ஆதி ஒரு வெற்றிக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். படத்தில் இடம்பெறும் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். பாரதியின் பற்றாளன் என்பதையும், ஒரு இயக்குநராகவும் தனது முதல் படத்திலேயே நிரூபித்திருக்கும் ஆதிக்கு பாராட்டுக்கள்.
வழக்கம் போல ஆதியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. அவருடைய ஆல்பம் மற்றும் பாடல்கள் படத்தில் இடையிடையே வருவது ரசிக்க வைக்கிறது. மேலும் சில நினைவுகளையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக வாடி புல்ல வாடி ஆல்பம் அவரது வாழ்க்கையை தழுவியே தனது மனதில் இருந்தே எழுதியிருப்பார் என்பதை படத்தை பார்க்கும் போது உணர முடிகிறது. கிருத்தி வாசன், யு.கே.செந்தில் குமார் இருவரது ஒளிப்பதிவில் காட்சிகள் இளைய தலைமுறையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பு ரசிக்க வைக்கிறது. புதுமையை முயற்சி செய்திருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.
மொத்தத்தில் `மீசைய முறுக்கு' நறுக்குனு இருக்கு.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்