இந்நிலையில், சவுந்தர்ராஜாவின் தங்கையான நாயகி அதிதியை பார்த்ததும் நாயகனுக்கு பிடித்துப்போய் விடுகிறது. பிறகு, அவள் சவுந்தர்ராஜாவின் தங்கை என்பது வெற்றிக்கு தெரிந்ததும் அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்துகிறார். பின்னர், ஒரு சந்திப்பில் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. பின்னர் அந்த மோதல் மெல்ல மெல்ல காதலாக உருவாகிறது.
அதேஊரில் பெரும் குடிகாரனாக இருககும் மொட்டை ராஜேந்திரனுக்கும், சவுந்தர்ராஜாவுக்கும் ஒரு பகை இருக்கிறது. அந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு ஒருநாள் மொட்டை ராஜேந்திரன் சவுந்தர்ராஜாவின் வேன் கண்ணாடியை உடைத்துவிடுகிறார். இதை வெற்றிதான் செய்திருப்பான் என்று நினைக்கிறார் சவுந்தர்ராஜா. ஏற்கெனவே அவன்மீது இந்த சம்பவத்தால் கொலை வெறியாக மாறுகிறது.
இது வெற்றியின் பெரியப்பாவான நரேனுக்கு தெரியவர, வெற்றியை காப்பாற்றுவதற்காக அவனை வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அதேநேரத்தில், சவுந்தர்ராஜாவுக்கும் வெற்றிக்கும் இருக்கும் பகையை போக்குவதற்காக அவனது குடும்பத்தில் சம்பந்தம் செய்ய நரேன் முடிவு செய்கிறார்.

அதன்படி, தன்னுடைய மகனுக்கு சவுந்தர்ராஜாவின் தங்கையான அதிதியை நிச்சயம் செய்கிறார் நரேன். இது நாயகனான வெற்றிக்கு தெரிய வருகிறது. அதன்பிறகு, வெற்றி என்ன முடிவெடுத்தார்? இவர்களது காதல் என்ன ஆனது? சவுந்தர்ராஜா-வெற்றியின் பகை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் வெற்றி ஏற்கெனவே சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் முழுநீள ஹீரோவாகியிருக்கிறார். நடிப்பு கொஞ்சம் நன்றாகவே வருகிறது. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி நடிக்கவேண்டும்.

கதாநாயகி அதிதி, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். அதிதியின் அண்ணனாக வரும் சவுந்தர்ராஜா ஆக்ரோஷமான நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். ஹீரோவுக்கு இணையான வேடம் என்பதால் தனது முழு நடிப்பையும் போட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
பாசமுள்ள பெரியப்பா கதாபாத்திரத்தில் நரேன் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரனின் கேபிள் டிவி காமெடிகள் ரசிக்க வைக்கிறது. குடித்துவிட்டு ரகளை செய்யும் காட்சிகள்தான் கொஞ்சம் போரடிக்கிறது. மற்றபடி, அவருடைய பங்களிப்பை சரியாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

இயக்குனர் பாலமுருகன் கிராமத்துப் பிண்ணனியில் இருவருக்குள் இருக்கும் பகையை மையப்படுத்திய கதையில், காதல், பாசம், செண்டிமெண்ட் என கலந்து சொல்லியிருக்கிறார். ஆனால், படத்தில் அடிக்கடி பிளாஸ்பேக் காட்சிகள் வைத்து படத்தை தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியாமல் தடை ஏற்படுத்தியிருக்கிறார்.
டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் கேட்டும்படி இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே சொல்ல வைக்கிறது. ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘தங்கரதம்’ வேகமில்லை.