அதன்படி, விதார்த், ரவீணா, விதார்த்தின் அம்மா, ரவீணாவின் பெற்றோர், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அவரது சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒரு லாரியில் குலதெய்வம் கோவிலுக்கு பயணமாகிறார்கள். நடுவில் அந்த லாரியை விதார்த் ஓட்டி செல்லும்போது, சடாரென்று பிரேக் போடுகிறார். என்னவென்று எல்லோரும் யோசிக்கையில், இவர்கள் லாரிக்கு கீழே ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடப்பது தெரிகிறது.

இறந்த நிலையில் கிடக்கும் அவரை பார்த்ததும் அனைவரும் பதற்றமடைகிறார்கள். அந்த இடத்தில் யாரும் இல்லாததால் அந்த விபத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். இதற்கு விதார்த்தின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், கடைசியில் இறந்த நபரை விபத்து நடந்த இடத்தின் பக்கத்திலேயே மறைத்து வைக்கிறார்கள்.
அதன்பின்னர், நடந்த சம்பவத்தை தனது மாமாவான வழக்கறிஞர் ஜார்ஜிடம், விதார்த் போனில் கூறுகிறார். அவர் சம்பவ இடத்திற்கு வந்து அனைவருக்கும் ஆறுதல் கூறிவிட்டு, தனது மருத்துவ நண்பரை வரவழைக்கிறார். மருத்துவரும் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை பரிசோதிக்கிறார். அப்போது இறந்து போனவர் விஷம் அருந்திதான் இறந்து போயிருக்கிறார் என்றும், விபத்தில் அவர் உயிரிழக்கவில்லை என்றும் ஜார்ஜிடம் கூறுகிறார். ஆனால், இந்த உண்மையை விதார்த்திடம் கூறாமல் மறைக்கிறார் ஜார்ஜ்.
லாரி ஏற்றியதால்தான் அவர் உயிரிழந்ததாகவும், இதில் யாராவது ஒருவர் குற்றவாளியாக கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று விதார்த்திடம் ஜார்ஜ் கூறுகிறார். ஆனால், இந்த விஷயம் எப்படியோ போலீசுக்கு தெரியவர, லாரியில் சென்ற அனைவர் மீதும் வழக்கு பதியப்படுகிறது.

இந்த பிரச்சினையில் இருந்து அனைவரும் மீண்டார்களா? அல்லது அவர்களுக்கு தண்டனை கிடைத்ததா? ஜார்ஜ் ஏன் விதார்த்திடம் உண்மையை மறைத்தார்? அதன் பின்னணில் என்ன இருக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கிராமத்தில் வாழும் ஒரு இளைஞனாக விதார்த் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பாசத்தை காட்டுவதிலும், பிரச்சனைகளை சமாளிப்பதிலும் பொறுமையை கடைப்பிடிக்கும் விதார்த், தனது வயது குறித்து கேலி செய்பவர்களிடம் சண்டை பிடிப்பது ரசிக்கும்படி இருக்கிறது.
ரவீணா தனது முதல் படத்திலேயே நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார். அவரது நடிப்பும், முக பாவனைகளும் ரசிக்கும்படி இருக்கிறது. ரவீணாவுக்கு படத்தில் அதிகளவில் நடிப்பு இல்லாவிட்டாலும், தான் வரும் காட்சிக்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

படத்தின் ஓட்டத்திற்கும், திருப்புமுனைக்கும் காரணமான ஜார்ஜ், வழக்கறிஞராக புதுமையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மற்றபடி ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அனைவருமே படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
ஒரு ஆட்டை பலிகொடுக்க செல்லும் ஒரு குடும்பம் ஒரு விபத்தால் என்னென்ன பிரச்சினைகள் சந்தித்தது என்பதை இப்படத்தில் இயக்குனர் சுரேஷ் சங்கையா. சொல்லியிருக்கிறார். உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான் என்பதை இப்படத்தில் வித்தியாசமான கதையுடன் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். படத்தின் நாயகனே வசனங்கள் என்று கூறுமளவுக்கு, அந்த பகுதி மக்களின் பேச்சுக்கு ஏற்றபடி வசனங்கள் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு. ஜார்ஜின் கதாபாத்திரத்தை முழுமையாக்காதது படத்தில் ஒரு குறையாக கூறலாம். மற்றபடி அன்பு, பாசம், வளர்ப்பு பிராணிகள் மீது குழந்தைகள் வைத்திருக்கும் அன்பு என சிறுசிறு காட்சிகள் கூட ரசிக்கும்படி இருக்கிறது.
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவில் கிராமத்தின் பின்னணி அழகாக காட்டப்பட்டிருக்கிறது. ஆர்.ரகுராமின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் விமர்சனம் செய்திகள்
- சிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்
- கவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்