அப்படி நடக்கும் கிடா சண்டையில் ராதாரவியின் கிடாவும், வாகை சந்திரசேகரின் கிடாவும் மோதுகின்றன. அதில், வாகை சந்திரசேகரின் கிடா வெற்றிவாகை சூடுகிறது. இதனால் அவமானமடைந்த ராதாரவி தற்கொலை செய்துகொள்கிறார். இதனால், அந்த ஊரே கலவரமாகிறது. இதில், நிழல்கள் ரவி கொல்லப்படுகிறார். நிழல்கள் ரவி கொல்லப்பட்டதால் அவருடைய மனைவியான சீதா தனது மகனை அழைத்துக்கொண்டு அந்த ஊரைவிட்டே வெளியேறுகிறார்.

அதன்பிறகு கதை 18 ஆண்டுகளுக்கு பிறகு நகர்கிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஊர் மிகவும் வறட்சியாக மாறியிருக்கிறது. ஊர் கோவில் மூடப்பட்டிருக்கிறது. 18 ஆண்டுகளாக கோவில் திருவிழாவும் நடைபெறாமல் இருக்கிறது. கிராமத்தின் வறட்சிக்கு கோவில் திருவிழாவை நடத்தாததுதான் காரணம் என்று நினைத்து ஊர் பெரியவர்கள் அனைவரும் கோவில் திருவிழாவை நடத்த முன் வருகிறார்கள்.
இதற்காக வாகை சந்திரசேகரிடம் சென்று முறையிடுகிறார்கள். அவரோ, கோவிலை திறந்தால் ராதாரவியின் குடும்பத்தார் பிரச்சினைக்கு வருவார்கள். அதனால் முதலில் அவர்களிடம் அனுமதி வாங்கி வாருங்கள் என்று கூறி அனுப்புகிறார். ஆனால், ராதாரவியின் மனைவியான வடிவுக்கரசியோ அந்த கோவிலை திறக்க அனுமதிக்க மாட்டேன் என்று விடாப்பிடியாக கூறுகிறார்.
இதற்கிடையில், ஊரைவிட்டு வெளியேறிய சீதாவின் மகனான நாயகன் செல்வாவும், வாகை சந்திரசேகரின் பேத்தியான நாயகி அனிதாவும் காதலித்து வருகிறார்கள். மறுபுறம் கோவில் திருவிழாவை எப்படியாவது நடத்தவேண்டும் என்று ஊர்க்காரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

அப்போது, ஊர்க்காரர்களிடம் வடிவுக்கரசி மீண்டும் கிடா சண்டை நடத்துமாறும், அதில் வாகை சந்திரசேகரின் கிடா வெற்றி பெற்றால் ஊர் திருவிழாவை நடத்த சம்மதிப்பதாகவும், அவருடைய கிடா தோற்றுவிட்டால் வாகை சந்திரசேகர் குடும்பத்துடன் ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறுகிறார்.
இதற்கு வாகை சந்திரசேகரும் ஒப்புக் கொள்கிறார். அதன்பிறகு, அந்த கிடா சண்டையில் யாருடைய கிடா வெற்றி பெற்றது? கோவில் திருவிழாவை நடத்தி கிராமத்தின் வறட்சியை போக்கினார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
ராதாரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி என அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இப்படத்தில் ஏராளம். அவர்கள் எல்லாம் தங்களது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், இந்த கதையில் நேர்த்தியில்லாதது இவர்களது நடிப்பை ரசிக்க முடியாமல் செய்துவிட்டது.

வடிவுக்கரசி தனது வீர வம்சத்துக்குண்டான ஆக்ரோஷமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பழைய வில்லியான வடிவுக்கரசியை மீண்டும் பார்க்க முடிகிறது. சீதா பாசமுள்ள அம்மாவாக பளிச்சிடுகிறார்.
நாயகனான செல்வாவுக்கு முதல் படம் என்பதால், அவரிடமிருந்து பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி அனிதாவுக்கும் நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே. சில காட்சிகள் வந்தாலும் அதிலும் தனது திறமையை நிரூபிக்க தவறியிருக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் பகவதி பாலா. அந்த சமுதாயத்தின் பெருமையை இப்படத்தில் சொல்லியிருந்தாலும், முகம் சுளிக்க வைக்கும் சில காட்சிகளை அமைத்திருப்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. அதேபோல், கதைக்கு தேவையில்லாத காட்சிகளையெல்லாம் புகுத்தி கடைசிவரை கதையே புரியாமல் செய்திருக்கிறார்கள்.
குட்லக் ரவி, கபாலீஸ்வர் ஆகியோரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. பகவதி பாலாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘வீர வம்சம்’ வீரமில்லை.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்