இவ்வாறாக அந்த வீடியோவின் வெயிட் அதிகரிக்க, இதுகுறித்த தகவல் அறியும் மாநகர போலீஸ் கமிஷனர் ஒய்.ஜி.மகேந்திரன் இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு முடுக்கிவிடுகிறார். இணையதளத்தின் மூலமாக நடைபெறும் குற்றம் என்பதால் இணைய குற்றப்பிரிவுக்கு (Cyber Crime) உத்தரவு செல்கிறது. அந்த பிரிவின் பொறுப்பாளராக வரும் ஸ்வேதா மேனன், ஈரோடு மகேஷ், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போதே, அந்த வீடியோவிற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து டெல்லி கணேஷ் இறந்து விடுகிறார்.

இதையடுத்து, இந்த குற்றப்பிரிவுக்கு சிறப்பு துணை ஆணையராக வரும் நாயகன் கணேஷ் வெங்கட்ராம், இதுகுறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போது, அந்த இணையதளத்தில் அடுத்த வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அந்த வீடியோவில் பத்திரிக்கை நிரூபர் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த வீடியோவிற்கான இணைய பார்வையாளர்களும் அதிகரிக்க பத்திரிக்கையாளரும் உயிரிழக்கிறார். இந்த சம்பவத்தை அடுத்து, ஈரோடு மகேஷ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்.
இருந்தாலும் மீண்டும் பணிக்கு திரும்பும் உத்வேகத்தில், இந்த குற்றம் குறித்து கண்டறிய, மகேஷ் தன்னால் இயன்ற உதவியை செய்து வர அடுத்த வீடியோவில் கணேஷ் வெங்கட்ராமுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்னவெக்றால், இதுவரை அந்த குற்றம் குறித்து கண்டறிய உதவிய ஈரோடு மகேஷ் மரண மேடையில் நிற்க, இந்த கொலைகளை செய்வது யார் என்பது தெரியாமல் கணேஷ் குழம்பி நிற்கிறார்.

மகேஷை காப்பாற்றுவதற்காக நாயகன் கணேஷ் வெங்கட்ராம் ஒருபுறம் போராட, அவரது முயற்சி பலிக்காமல், ஈரோடு மகேஷ்-ம் இறந்துவிடுகிறார். அடுத்ததாக மரண மேடைக்கு செல்லும் ஸ்வேதா மேனனை கணேஷ் வெங்கட்ராம் மீட்டாரா? இந்த சம்பத்திற்கு காரணம் யார்? ஏன் வரிசையாக இணைய கொலைகளை செய்கிறார்? அதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பது படத்தின் மீதிக் கதை.
பொதுவாக போலீஸ் அல்லது ராணுவ வேடத்திலேயே அதிகளவில் நடித்திருக்கும், கணேஷ் வெங்கட்ராம், இப்படத்திலும் ஒரு போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஸ்வேதா மேனன் தனது முதிர்ந்த நடிப்பால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அழகான போலீஸ் அதிகாரியாக திரையில் ரசிக்க வைக்கிறார்.
சுகன்யா ஸ்ரீதரன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தில் அவருடைய கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கிறது. ஈரோடு மகேஷ் நடிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், காமெடியில் தோல்வியையே சந்தித்திருக்கிறார். படம் முழுக்க காமெடிக்காக அவர் செய்த முயற்சிகள் அனைத்துமே தோல்வியிலேயே முடிந்திருக்கிறது என்று சொல்லலாம். மற்றபடி ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ் அவர்களது முதிர்ந்த நடிப்பால் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கின்றனர். படவா கோபி, கௌசிகா உள்ளிட்டோரின் நடிப்பும் ரசிக்கும்படி இருந்தது.

ஷங்கர், சுரேஷ் என இரு இயக்குநர்கள் இயக்கியிருந்தும், படம் சொல்லும்படியாக பெயர் வாங்கவில்லை. இணையதளத்தின் மூலமாக நடைபெறும் கொலையை தெளிவாக காட்டியிருந்தாலும், அதற்கான திரைக்கதையை சரிவர அமைக்கவில்லை. அது படத்தை பார்ப்பவர்களுக்கு சுளிப்பை உண்டாக்குகிறது. கொலை பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நில இடங்களில் த்ரில்லர், திருப்புமுனைகள் இருந்தாலும் அதை காட்சிப்படுத்துவதில் தவறியது படத்திற்கு பலவீனம். பல இளம் இயக்குநர்கள் அவர்களது முதல் படத்திலேயே சிறிய விஷயங்களை காட்சிப்படுத்தி வெற்றி பெற்று, தமிழ் சினிமாவில் ஒரு நிலையான பெயர் வாங்கும் நிலையில், இரு இயக்குநர்கள் இணைந்தும் படத்திற்கு முழுமையை அளிக்க தவறிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏ.கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவும், அரோல் கோரெலியின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. ஒருசில பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `இணையதளம்' வேகமில்லை.