வந்த இடத்தில் டீச்சரான ராதிகா பிரசித்தாவுக்கும் ராஜகுமாரனுக்கும் நட்பு உருவாகிறது. ராதிகா பிரசித்தா உடன் இருக்கும் சிறுமியிடம் ராஜகுமாரன் ரொம்பவும் அன்புடன் இருக்கிறார். இந்நிலையில், அந்த தொகுதிக்கு அமைச்சர் ஒருவர் வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் பரத். அடுத்ததாக அந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ. பதவிக்கு அந்த அமைச்சர்தான் பரத்தை பரிந்துரைக்கிறார்.

ஊருக்கு வரும் அமைச்சர் பள்ளியில் நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறார். அப்போது பள்ளி மாணவியான கீரித்தியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார். இதை பார்க்கும் பரத், அவரால்தான் தனக்கு எம்.எல்.ஏ.பதவி கிடைக்கவிருக்கிறது என்பதால் அதை கண்டும் காணாததுமாக சென்றுவிடுகிறார். ஆனால், பிரசித்தாவோ அமைச்சரிடமிருந்து அந்த மாணவியை காப்பாற்றுகிறாள்.
இந்த விஷயம் பிரசித்தா மூலமாக ராஜகுமாரனுக்கு தெரிய வருகிறது. எந்தவிதத்திலும் அந்த பெண்ணுக்கு நீதி தேடிக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் ராஜகுமாரன் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைக்கு அந்த அமைச்சரை எப்படி தண்டித்தார்? இதில் ராதிகா பிரசித்தா, பரத்தின் பங்கு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் பரத் படம் முழுக்க மிடுக்கான தோற்றத்துடன் ஒரு பெரிய மனிதர்போல் படம் முழுக்க அழகாக வலம் வந்திருக்கிறார். இவருடைய கெட்டப் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இளம் அரசியல்வாதி போன்ற தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். முதல் பாதியில் வில்லத்தனம் கலந்ததுபோலவும், இரண்டாம் பாதியில் நல்லவனாகவும் தனது நடிப்பில் மாற்றம் கொடுத்து நடித்திருப்பது சிறப்பு.
ராஜகுமாரனின் நடிப்புதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இதுவரையிலான படங்களில் அவரை காமெடிக்காக பயன்படுத்தியவர்கள், இந்த படத்தில் விஜய் மில்டன் அவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அப்பாவியான தோற்றத்துடன் வலம்வரும் இவரது நடிப்பு அனைவரும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. அதேபோல், நடிப்பு என்று தெரியாத அளவுக்கு எதார்த்தமான நடிப்பை பதிவு செய்து கைதட்டல் பெறுகிறார்.

ராதிகா பிரசித்தா, ஏற்கெனவே குற்றம் கடிதல் படத்தில் டீச்சராக வந்து தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். இந்த படத்திலும் அவரது நடிப்பு ஒருபடி மேலே இருக்கிறது. தனது சொந்த கதையை சொல்லி அழும் காட்சிகளில் எல்லாம் அவர்மீது நமக்கும் இரக்கம் வருகிறது.
பள்ளி மாணவியாக வரும் கீர்த்தி, மற்றும் அவளுக்கு அம்மாவாக நடித்தவரும், போலீஸ் ஏட்டு, இன்ஸ்பெக்டர் ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அமைச்சராக வரும் தயா வெங்கட்டும் காமம் கலந்த அரசியல்வாதியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

அரசியல் அதிகாரத்தின் மூலமாக சாமான்ய மக்களுக்கு நேரும் துயரங்களை தட்டிக்கேட்க துடிக்கும் எவருக்கும், நியாயமான தீர்வு கிடைத்ததே கிடையாது. அதேநேரத்தில், எந்தவொரு நியாயமும் கிடைக்கவில்லையெனில் ஒரு சாமான்யனின் கோபம் இப்படித்தான் வெளிப்படும் என்பதை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.
சமீபகாலமாக சமூகத்தில் நிலவி வரும் பாலியல் சீண்டல்கள் எந்த வயது பெண்களாக இருந்தாலும் அவர்களை தொடர்ந்து வரும் மிகப் பெரிய ஆபத்தாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. இதுபற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தால்தான் இந்தக் கொடூரங்கள் கொஞ்சமேனும் குறையும் என்பதை வலியுறுத்தும் படமாக இது அமைந்துள்ளது.

படம் முழுவதும் ரொம்பவும் சீரியஸாக செல்லாமல் ஆங்காங்கே நகைச்சுவையும் கொடுத்து ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். இப்படத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதுபோல் இவரது வசனங்களும் அமைந்திருப்பது சிறப்பு. புளூபிலிம்ல நடிக்கிற நடிகைகளை தேடிப்பிடித்து ஆட்டோகிராப் வாங்குறீங்க. ஆனால் உங்க பக்கத்து வீட்ல இருக்குற தப்பே செய்யாத பெண்ணை பார்த்து தப்பா பேசுறீங்களே..? என்னதாண்டா உங்க பிரச்சினை…? என்று ராஜகுமாரன் கேட்கும் கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது என்பதுதான் உண்மை.
அதேபோல், விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது. கதை நடக்கும் கிராமத்தின் அழகை அவர் பதிவாக்கியிருக்கும் விதமும், ஒருசில காட்சிகளில் அவர் வைத்திருக்கும் கேமரா கோணமும் பார்ப்பவர்களை கதையோடு ஒன்றி பயணிக்க உதவியிருக்கிறது. சுப்ரீம் சுந்தரின் சண்டை காட்சிகளில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அருமையாக இருக்கிறது. அருணகிரியின் இசையில் இரண்டே இரண்டு பாடல்கள்எதான் என்றாலும் அவை இரண்டும் முத்தானவை. முழுமையாக கேட்கும் அளவுக்கு இனிமையாக இருக்கிறது. கதையோடு ஒட்டியே பாடல்களும் நகர்வதால் ரசிக்கவே முடிகிறது. பின்னணி இசையும் கதைக்கு தேவையான அளவு அமைத்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில் ‘கடுகு’ அவசியம் பார்க்கவேண்டிய படம்.