நாயகி அஞ்சனாவின் தாத்தா லிவிங்ஸ்டன் மிகப்பெரிய ஜமீன்தார். அவர் இறந்துவிட்ட நிலையில் அவளது பாட்டி பல்லவி மட்டும் அந்த கிராமத்து வீட்டில் வசித்து வருகிறார்.
பாட்டியின் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணி இருக்கும் அஞ்சனாவுக்கு அங்கேயும் மர்ம உருவத்தால் தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. இதனால், அங்கேயும் நிம்மதியில்லாமல் தவிக்கிறாள் நாயகி. இதற்கிடையில், அந்த ஊருக்கு வரும் நாயகன் சிலம்பரசனும், அஞ்சனாவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இந்நிலையில், தன்னை அச்சுறுத்தும் மர்ம உருவம் யார் என்று தெரியாமல் குழம்பி போகிறார் நாயகி. ஒருகட்டத்தில் தனது தாத்தா லிவிங்ஸ்டன் செய்த தவறால்தான் இந்த மர்ம உருவம் தன்னை துன்புறுத்துவதை கண்டறிகிறாள். அவளுடைய தாத்தா செய்த அந்த தவறு என்ன? அதனால் பாதிக்கப்பட்டது யார்? என்பதை சொல்வதே மீதிக்கதை.
படத்தின் கதை முழுக்க நாயகி அஞ்சனாவே நிறைந்திருக்கிறார். அதனால், தனது கதாபாத்திரத்தின் வலு தெரிந்து ஓரளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். நிறைய காட்சிகளில் இவர் பயப்படுவதுகூட ரொம்பவும் செயற்கையாக இருப்பது படத்தை ரசிக்க தோன்றவில்லை.
நாயகன் சிலம்பரசனுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. இருப்பினும், சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார். பாட்டியாக வரும் பல்லவி, தாத்தாவாக வரும் லிவிங்ஸ்டன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். லிவிங்ஸ்டனிடன் உதவியாளராக வரும் காதல் தண்டபாணியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றபடி, படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் பதியவில்லை. இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த படம் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. அதற்குள் நிறைய திகில் படங்கள் வெளியாகி, ரசிகர்களை பீதியாக்கியுள்ள நிலையில், இந்த படம் பெரிதாக பீதியை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை. இருப்பினும், இன்னமும் கிராமங்களில் வழிபட்டு வரும் பெண் தெய்வங்கள் உருவான கதையை இந்த படத்தில் சொல்லியிருப்பதற்காக இயக்குனரை பாராட்டலாம்.
வசந்தமணியின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையும் மிரட்டவில்லை. சாய் நடராஜின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளும் பெரிதாக இல்லை.
மொத்தத்தில் ‘உன்னைத் தொட்டுக் கொள்ள வா’ தொட முடியவில்லை.
மேலும் விமர்சனம் செய்திகள்
- ரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்
- ஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்
- பணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்
- நடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்
- தந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்