காட்டுக்குள் சென்று வளரும் வீரபாரதி, நாகரீகம் இல்லாமல் முரடனாக வளர்கிறான். இந்நிலையில், ஊர் தலைவரும், அவரது மகனும் சேர்ந்து ஊருக்குள் அட்டகாசம் செய்கிறார்கள். இதனை அறியும் வீரபாரதி அடிக்கடி காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வந்து அனைவரையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு, மிரட்டி விட்டும் செல்கிறான்.
வீரபாரதி யாரையெல்லாம் மிரட்டிவிட்டு செல்கிறானோ அவர்கள் எல்லாம் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். இந்நிலையில், ஊர் மக்கள் எல்லோரும் வீரபாரதிதான் அனைவரையும் கொன்றிருப்பான் என்று எண்ணி, அவனை போலீசில் ஒப்படைக்கிறார்கள்.
உண்மையில், அவர்களையெல்லாம் வீரபாரதிதான் கொலை செய்தானா? அல்லது அவனது பெயரை பயன்படுத்தி வேறு யாராவது இந்த கொலைகளை செய்தார்களா? ஜெயிலுக்கு போன வீரபாரதியின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் வீரபாரதி முரடன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி சமீராவும் கிராமத்து பெண்ணாக அழகாக இருக்கிறார். ஊர் தலைவராக நடித்திருப்பவர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். வீரபாரதியின் அம்மாவாக நடித்திருப்பவரும் கண் பார்வையற்றவராக சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தில் காமெடிக்கு வையாபுரி, கிரேன் மனோகர் இருவரும் வருகிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் காமெடி என்ற பெயரில் செய்யும் கலாட்டாக்கள் எல்லாமே சிரிப்பை வரவழைப்பதற்கு பதில் வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கின்றன.
படத்தின் இயக்குனர் விஜேந்திரன், கதாபாத்திரங்களை புதுமுகங்களாக தேர்வு செய்திருந்தாலும், அனைவரும் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் முழுமையடையாமலேயே சென்றிருப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், பிற்பாதியில் முன்பாதியில் போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்கும் விதமாக அமைக்கப்பட்ட காட்சிகளில் எல்லாம் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. இயக்குனர், முதல்பாதியில் உள்ள காட்சிகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல்பாதியில் சில காட்சிகளை டிரிம் செய்தால் படம் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்க தோன்றுகிறது.
முரளி கிருஷ்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்க தோன்றுகிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெயச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலவீனமாக இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பது படத்தை பார்ப்பதற்கு தடை போடுகிறது.
மொத்தத்தில் ‘வென்று வருவான்’ பொறுமையுடன் வெல்வான்.