அங்கு வேலை முடிந்ததும் மாலை நேரத்தில் மாவுக் கடையிலும், மீன் கடையிலும் வேலை செய்து சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில், பத்தாவது படிக்கும் தனது மகளுக்கு கணக்கு பாடம் சரியாக வராது என்பதால் அவளை அவளுக்கு டியூசனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார் அமலாபால்.
ஆனால், மகளோ தனது அம்மா வீட்டு வேலை செய்வதால் தானும் வீட்டு வேலைக்கு செல்லவேண்டியதுதான் இருக்கும் என்று நினைத்து படிப்பில் அக்கறை செலுத்தாமலும், எந்தவித கனவு இல்லாமலும் இருந்து வருகிறாள். இதனால் தனது மகளின் எதிர்காலத்தை எண்ணி பயப்படும் அமலாபால், அவள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக எடுக்கும் துணிச்சலான முயற்சிதான் ‘அம்மா கணக்கு’.
அமலாபால் திருமணத்திற்கு பிறகு ஹீரோயின் என்ற அந்தஸ்தை உடைத்து ஒரு 10-வது படிக்கும் மகளின் தாயாக துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். மிகவும் பொறுப்பான கதாபாத்திரம் இவருடையது. ஆனால், திரையில் காணும்போது அந்த கதாபாத்திரத்தின் மேல் ஒரு அனுதாபமோ ஈர்ப்போ ஏற்படாதது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, இவர் பேசும் லோக்கல் சென்னை பாஷை முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமலாபாலின் மகளாக வரும் சிறுமிக்கு முதல் படம் என்றாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து எதார்த்தம் கலந்த சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாள். தலைமையாசிரியராக வரும் சமுத்திரகனி, 2020-க்கு பிறகு உலகில் அதிநவீனமாக தயாரித்து வெளியிட்ட ரோபோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். இம்மாதிரியான ஆசிரியர் ஒருவரை எங்கோ பார்த்துதான் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இருந்தாலும், நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட இவரது கதாபாத்திரத்தை ஏற்கும்படியாக இல்லை.
டாக்டராக வரும் ரேவதி நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் வந்தாலும், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். பள்ளியில் சக மாணவர்களாக வரும் சிறுவர்கள் அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
இந்தியில் வெற்றிபெற்ற ‘நில் பட்டே சன்னாட்டா’ படத்தின் ரீமேக்தான் ‘அம்மா கணக்கு’. இந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரியே தமிழிலும் இயக்கியிருக்கிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் பெற்றோர்கள் முனைப்புடன் செயல்பட்டால் தங்களுடைய குழந்தையை எந்த உயர்ந்த நிலைக்கும் அழைத்து செல்ல முடியும் என்பதை இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கும் இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். அதை, தமிழில் காட்சிப்படுத்தும்போது ரசிகர்களை முழுமையாக கவரும்படியாக செய்யாமல் தவறவிட்டிருப்பது வருத்தமே.
இளையராஜாவின் இசை கதையை நகர்த்தி செல்வதற்கு உதவியிருக்கிறது.
மொத்தத்தில் ‘அம்மா கணக்கு’ திருப்தியில்லை.
மேலும் விமர்சனம் செய்திகள்
- செந்தாமரையின் வாழ்க்கை போராட்டம் - செந்தா விமர்சனம்
- சிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்
- கவர்ச்சி அழகியிடம் ஏமாறும் நண்பர்கள் - திருட்டு அழகி விமர்சனம்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்