இவருடைய விளையாட்டில் ரவிதேஜாவின் நண்பர் ஒருவரும் சிக்கிக் கொள்கிறார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை வரை செல்கிறார். இதை கேள்விப்பட்ட நாயகன் ரவிதேஜா, ஸ்ருதியின் ரூட்டிலேயே சென்று அவளது விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கிறார். ஸ்ருதிக்கு ஏற்கெனவே ஆத்வி சேஷிற்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ரவிதேஜா தொடர்ந்து செய்யும் டார்ச்சரை தாங்கமுடியாத ஸ்ருதி, அவரிடமிருந்து எப்படியாவது தப்பிக்க நினைக்கிறார். இதற்காக அவர் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகிறது. இந்நிலையில், ஒருமுறை ஸ்ருதியிடம் சில்மிஷம் செய்யும் ஒருவனிடமிருந்து ரவிதேஜா காப்பாற்றுகிறார். அப்போது அவருக்கு சில அறிவுரைகளையும் கூறுகிறார். இதனால், ஸ்ருதிக்கு ரவிதேஜா மீது காதல் வருகிறது.
இந்நிலையில், ஸ்ருதி, ரவிதேஜாவை காதலிப்பது தெரிந்த பிரகாஷ் ராஜ் ஸ்ருதியின் வீட்டுக்கு பெண் கேட்கச் செல்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதியை ஏற்கெனவே நிச்சயம் செய்திருந்த ஆத்வி சேஷ் மற்றும் அவரது பெற்றோர்கள் இருக்க, பிரகாஷ்ராஜ் சென்று பெண் கேட்டதும் பிரச்சினை ஏற்படுகிறது. முடிவில், ஸ்ருதியை ரவிதேஜாவுக்கே திருமணம் செய்துகொடுக்க ஸ்ருதியின் அப்பா நாசர் முடிவெடுக்க, பிரச்சினை மேலும் வலுக்கிறது.
இதனால் அவமானடைந்த ஆத்வி சேஷின் அம்மா தூத்துக்குடியில் பெரிய தாதாவான தனது அண்ணன் அசுடோஸ் ராணாவுக்கு போன் போட்டு பெங்களூருக்கு வரவழைக்கிறார். இதற்கிடையில், ரவிதேஜாவுக்கும் ஸ்ருதிக்கும் கோவிலில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடக்க, அங்கு வரும் ராணா, பிரகாஷ்ராஜையும் ரவிதேஜாவையும் ஒரே இடத்தில் பார்த்து அதிர்ந்துபோகிறார். இருவரும் அப்பா, மகன் கிடையாது என்றும், ஒருவரையொருவர் கொல்லத்துடிக்கும் எதிரிகள் என்றும், தான் இதுநாள்வரை கொல்ல துடிக்க தேடி வந்தது இவர்களைத்தான் என்றும் ஒரு பெரிய குண்டை தூக்கிப் போடுகிறார்.
அப்போது நடக்கும் சண்டையில் பிரகாஷ்ராஜை கத்தியால் குத்திவிட்டு, ஸ்ருதிஹாசனை தூக்கிக் கொண்டு தனது ஆட்களுடன் வெளியேறுகிறார் ராணா.
ராணா கூறியதுபோல், பிரகாஷ் ராஜும் - ரவிதேஜாவும் உண்மையிலேயே எதிரிகளா? இவர்களுக்குள் இருக்கும் உறவு என்ன? வில்லனிடமிருந்து ஸ்ருதியை ரவிதேஜா எப்படி காப்பாற்றினார்? என்பதை மீதிப் பாதியில் ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
தெலுங்கில் ‘பலுபு’ என்ற பெயரில் வந்த படமே தமிழில் ‘எவன்டா’ என்ற பெயரில் பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறது. படம் முழுக்க ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார் ரவிதேஜா. இவர் பேசும் பஞ்ச் வசனங்களிலும் அனல் பறக்கிறது. காதல், ரொமான்ஸ் காட்சிகளில் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தளவுக்கு தமிழ் ரசிகர்களை இவர் கவரவில்லை.
ஸ்ருதிஹாசன் கிளாமரில் ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கிறார். இவரும் பிரம்மானந்தும் சேர்ந்து செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் கலகலக்க வைக்கின்றன. பிரகாஷ் ராஜ் பொறுப்பான அப்பாவாகவும், பிற்பாதியில் மிரட்டலான வில்லனாகவும் வந்து ரசிக்க வைக்கிறார். அதேபோல், நாசரும் பாசமான அப்பாவாக நம் கண்முன்னே நிற்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் ஒருசில காட்சிகள் வரும் ராய் லட்சுமி ஒரு பாட்டுக்கும், கவர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்பட்டிருக்கிறார். அஞ்சலிக்கு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம். ஒருசில காட்சிகளே வந்தாலும் நடிப்பால் மனதில் நிற்கிறார். வில்லனாக வரும் அசுடோஸ் ராணா பார்வையாலேயே மிரட்டுகிறார். மற்றபடி, படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றனர். அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் கோபிசந்த் மலிநேனி. தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு மசாலா தடவி படத்தை கொடுத்திருக்கிறார். அதேநேரத்தில், தமிழிலும் இப்படத்தை ரசிகர்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. படத்தில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ் முடிச்சுகளை போட்டிருக்கிறார் இயக்குனர். அவற்றுக்கு நீண்டநேரம் கொடுக்காமல் உடனே உடனே அவிழ்த்தும் விட்டிருக்கிறார். இது படத்துக்கு பெரிய பலம்.
தமன் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போடவைக்கின்றன. பின்னணி இசையிலும் தெறிக்கவிட்டிருக்கிறார். ஜெயனன் வின்சென்ட் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா பந்தாடியிருக்கிறது.
மொத்தத்தில் ‘எவன்டா’ தெறிக்கவிடுவான்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- விஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்
- தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்
- உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்
- பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
- நட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்