ஐதராபாத் செல்லும் வழியில் இந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்களுடைய கையை விட்டு செல்கிறது. கார் போனதால், போதை மருந்து கும்பலின் தலைவன் அமரேந்திரன் தங்களை கொன்றுவிடுவான் என்பதற்காக இவர்கள் மூவரும் வேறொரு வழியை கண்டுபிடிக்கிறார்கள்.
இதில் அவர்கள் வெற்றிபெற்றார்களா? அல்லது போதை மருந்து கும்பல் தலைவனிடம் சிக்கி உயிரிழந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சித்தார்த்துக்கு இப்படத்தில் நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் இவருடைய நடிப்பைவிட முகபாவணைகள் ரொம்பவும் ரசிக்க வைக்கிறது. மெட்ராஸ் பாஷையும் சிறப்பாக பேசி நடித்திருக்கிறார்.
அவினாஷ், சனந்தும் சித்தார்த்துக்கு போட்டி போடும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, அவினாஷ் பேசும்போது உதட்டை தூக்கி, கண்ணை சுருக்கி பேசுவது எல்லாம் ரசிக்க வைக்கிறது. அதேபோல், அவர் பேசும் வேகமான மெட்ராஸ் பாஷையும் வெகுவாக ரசிக்க வைக்கிறது. பயந்தவர்போலவே வரும் சனந்தின் துறுதுறு நடிப்பும் கவரும்படி இருக்கிறது.
ரோலெக்ஸ் ராவுத்தர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராதாரவி, அசால்ட்டான வசனங்கள் பேசி அசத்தலான கைதட்டல் பெறுகிறார். இடைவேளைக்கு பிறகே இவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
போதை மருந்து கும்பலின் தலைவனாக வரும் அமரேந்திரன், நரசிம்மன், பகவதி பெருமாள், சாய்தீனா ஆகியோருக்கும் படத்தில் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதை சரியாக செய்திருக்கிறார்கள். துப்பாக்கி, போதை மருந்து கடத்தல் செய்யும் சாய்தீனா இறுதிக்காட்சியில் துப்பாக்கிகளுக்கு விளக்கம் கொடுக்கும் காட்சியெல்லாம் நகைச்சுவைக்கு நூறு சதவீதம் கியாரண்டி.
அதேபோல், அமரேந்திரனின் வலதுகையாக வரும் ‘பை’ கதாபாத்திரத்தில் வரும் குண்டு மனிதர் பேசும் ‘ஹர ஹர மகாதேவகி’ பாஷை தியேட்டரில் அப்லாஷை அள்ளுகிறது. நாசர், ஆர்.ஜே.பாலாஜி, ஜாஸ்மின் பாஸின் ஆகியோர் ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெயரே வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளது இயக்குனர் தீரஜ் வைத்தியின் தனிச்சிறப்பு என்று கூறலாம். படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் காஸ்ட்யூம் என்பதற்கான செலவுகள் அதிகமில்லை. அந்த பட்ஜெட்டை கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகளுக்கு பயன்படுத்தி சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
முதலில், கதாநாயகி இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க துணிந்த சித்தார்த்தும், அதை இயக்க துணிந்த இயக்குனருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். முதல்பாதி விறுவிறுப்புடன் சென்றாலும், இரண்டாம் பாதி இழுத்துக் கொண்டே செல்வதுபோல் இருக்கிறது. கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
விஷால் சந்திரசேகர் இசையில் ‘சூட் த குருவி’ பாடல் மட்டும் ரசிக்கும்படி இருக்கிறது. முதல்பாதியில் இடம்பெறும் ‘பப்’ பாடல் எப்போது முடியும் என்கிற மாதிரி நீளமாக உள்ளது. பின்னணி இசை ஓரளவுக்கு ரசிக்கும்படி இருக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது.
வடிவேலு ‘காதலன்’ படத்தில் பெண்களின் அழகை ‘ஜில் (சூப்பர்) ஜங் (சுமார்) ஜக் (தேறாது)’ என்று வர்ணித்திருப்பார்.
அதன்படி பார்த்தால் ‘ஜில் ஜங் ஜக்’ - ஜில்.
மேலும் விமர்சனம் செய்திகள்
- தன் குடும்பத்தை காக்க போராடும் மோகன்லால் - திரிஷ்யம் 2 விமர்சனம்
- பாசத்திற்காக ஏங்கும் நாயகன் - செம திமிரு விமர்சனம்
- விஷாலின் ஆக்ஷன் விருந்து - சக்ரா விமர்சனம்
- பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் படம் - கமலி பிரம் நடுக்காவேரி விமர்சனம்
- விபத்தில் மரணம் அடைந்தவர்களின் கதை - இது விபத்து பகுதி விமர்சனம்