ஒருநாள் இவர்கள் சந்தானத்தின் ஜாதகத்தை ஒரு ஜோசியகாரரிடம் கொண்டு போய் கொடுக்கின்றனர். ஜாதகத்தை பார்க்கும் ஜோசியக்காரர், சந்தானத்துக்கு இன்னும் மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் இன்னும் நான்கு வருடம் கழித்துதான் திருமணம் நடக்கும். அப்படியும் நடக்கவில்லையென்றால், சாமியாராக மாறக்கூட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்.
இதைகேட்ட சந்தானத்தின் பெற்றோர்கள் சந்தானத்திற்கு உடனே பெண் பார்க்க தொடங்குகிறார்கள். இவர்கள் பார்க்கும் பெண்கள் யாரும் சந்தானத்திற்கு பிடிக்காமல் போகிறது. இந்நிலையில் சந்தானத்தின் நண்பரான விடிவி கணேஷ், பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம், அழகான பையனுக்கு அசிங்கமான பெண்ணையும், அழகான பெண்ணுக்கு அசிங்கமான பையனையும் தான் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கூறி காதல் திருமணத்தின் மீது ஈர்ப்பை உண்டாக்குகிறார்.
இந்த அறிவுரையை கேட்ட சந்தானம், அழகான பெண்களை தேடி காதலிக்க ஆரம்பிக்கிறார். இவருக்கு ஏற்றார்போல் எந்த பெண்ணும் கிடைக்காத நிலையில், ஒரு சண்டையில் அஷ்னா சவேரியை பார்க்கிறார். பார்த்தவுடனே அவர் மீது காதல் வயப்படுகிறார். அதன்பின் அஷ்னா சவேரி பின்னாலேயே சுற்றி சுற்றி வந்து தன் காதலை கூறுகிறார். ஆனால் அஷ்னா, சந்தானத்தின் காதலை ஏற்க மறுக்கிறார்.
இந்நிலையில், சந்தானத்தின் பெற்றோர்கள் அகிலா கிஷோரை பெண் பார்க்கிறார்கள். அஷ்னா சவேரி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததாலும், சந்தானத்தின் மாமாவான தம்பி ராமையாவின் சூழ்ச்சியாலும் அகிலா கிஷோரை திருமணம் செய்ய சம்மதித்து, இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. இந்த நேரத்தில், அஷ்னாவுக்கு சந்தானத்தின் மீது காதல் வருகிறது.
இறுதியில் சந்தானம் அஷ்னாவின் காதலை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்தாரா? அல்லது பெற்றோர்கள் பார்த்த அகிலா கிஷோரை திருமணம் செய்தாரா? என்பதை காமெடியோடு சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், நாயகனுக்கான அந்தஸ்தை இந்த படத்தில் முழுதாக பெற்றிருக்கிறார். முந்தைய படத்தை விட இப்படத்தில் அதிக திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். நடனம், காதல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், சென்டிமென்ட் என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். அவருடைய வழக்கமான டைமிங் காமெடி இப்படத்தில் அவருக்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இரண்டு பெண்களுக்கு மத்தியில் இவர் மாட்டிக்கொள்வது, தாய் மாமாவான தம்பிராமையாவை கலாய்ப்பது, விடிவி கணேஷை கலாய்ப்பது ஆகிய காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது.
முதல் நாயகியான ஆஷ்னா சவேரி மாடர்ன் பெண்ணாக வலம் வந்திருக்கிறார். பாடல் காட்சிகள், சந்தானம் மீது காதல் வயப்படும் காட்சிகள், சந்தானம் மீது கோபப்படும் காட்சிகள் என தன் திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டாம் நாயகியான அகிலா கிஷோர் குடும்ப பெண்ணாக வந்து மனதில் பதிந்திருக்கிறார். சந்தானத்திற்கு அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன், அம்மா பிரகதி, டெய்லராக வரும் விடிவி கணேஷ், தாய் மாமா தம்பி ராமையா, மற்றும் நண்பர்களாக வருபவர்கள் ஆகிய அனைவரின் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
காதல் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் முருகானந்த், அதில் நகைச்சுவையை கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவையில் ரசிகர்களுக்கு பஞ்சமில்லாமல் விருந்து படைத்திருக்கிறார்.
படத்திற்கு பலமே திரைக்கதைதான். ஒரு காட்சியில் கூட ரசிகர்களை தொய்வடைய விடாமல் படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். கிளைமாக்சில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் ரசிகர்களை கூடுதலாக ரசிக்க வைத்திருக்கிறது.
சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. இவருடைய பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்கள் கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவோடு சேர்ந்து பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது. மேலும், தன்னுடைய ஒளிப்பதிவில் நடிகர்கள், நடிகைகளை அழகாக காண்பித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘இனிமே இப்படித்தான்’ எல்லாமே சூப்பர்தான்.
மேலும் செய்திகள்
- மர்ம காட்டின் ரகசியத்தை சொல்லும் ஃப்ரோஸன் 2 விமர்சனம்
- அர்ஜுன் ரெட்டிக்கு ஈடு கொடுத்ததா? - ஆதித்ய வர்மா விமர்சனம்
- 8 வயது சிறுவனுக்கும், 80 வயது முதியவருக்கும் இடையேயான நட்பு - கேடி என்கிற கருப்புதுரை விமர்சனம்
- விவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்
- குடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்ஷன் - விமர்சனம்