ஒருநாள் ஊர்வசி, சினேகாவிடம் ஒரு ஓட்டல் போன் நம்பரை கொடுத்து உனக்கு ஏதாவது சாப்பிட வேண்டுமென்றால், இந்த நம்பருக்கு போன் பண்ணி ஆர்டர் பண்ணிக்கொள் என்று சொல்கிறார். சினேகாவும் டப்பிங் பேசிவிட்டு, பசிக்கிறதே என்று ஊர்வசி கொடுத்த நம்பருக்கு போன் செய்கிறார். ஆனால், நம்பர் மாறிப்போய் பிரகாஷ் ராஜூக்கு சென்றுவிடுகிறது. சினேகாவும், ஓட்டல்தான் என்று எண்ணி மளமளவென்று தனது ஆர்டரை சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விடுகிறார்.
சினேகாவின் இந்த செயலால், செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ் ராஜுக்கு, தான் கொடுத்த ஆர்டர் இன்னும் வரவில்லையே என்று சினேகா மறுபடியும் போன் செய்கிறார். இந்த முறை பிரகாஷ்ராஜ் இது ஓட்டல் இல்லை என்று அவரிடம் விளக்க, அதற்கு சினேகா இதை முதலிலேயே சொல்லவேண்டியதுதானே என அவரிடம் சண்டைக்கு போக, இருவருக்கும் வாக்குவாதம் வந்து அது சண்டையில் போய் முடிகிறது.
இந்நிலையில் பிரகாஷ் ராஜ் வீட்டிற்கு அவரது அக்கா பையன் தேஜஸ் வருகிறார். அவரிடம் நடந்த விஷயத்தை பிரகாஷ்ராஜ் விளக்க, பிரகாஷ் ராஜூக்கு தெரியாமலேயே அவருடைய செல்போனில் இருந்து சினேகாவிற்கு ஸாரி என்று மெசேஸ் அனுப்புகிறார் தேஜஸ். இதைபார்க்கும் சினேகாவின் தங்கையான சம்யுக்தா, பதிலுக்கு சினேகாவை பிரகாஷ்ராஜிடம் பேசி சமாதானமாகுமாறு வற்புறுத்துகிறார். அதற்கு சினேகாவும் ஒப்புக்கொண்டு பிரகாஷ் ராஜிடம் போனில் பேசி தான் நடந்துகொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்கிறார். பதிலுக்கு பிரகாஷ் ராஜூம் சினேகாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்.
அதன்பிறகு இருவரும் போன் மூலமாக இவர்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்க ஆசைப்படுகின்றனர். இருந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் தங்கள் வயதையும், தோற்றத்தையும் கருத்தில் கொண்டு நேரில் சந்திக்க பயப்படுகின்றனர். அதற்காக பிரகாஷ் ராஜ் தனது அக்கா பையனான தேஜஸையும், சினேகா தனது தங்கை சம்யுக்தாவையும் அனுப்பி வைக்கிறார்கள்.
சம்யுக்தாவை நேரில் சந்திக்கும் தேஜஸ், அவள்தான் பிரகாஷ்ராஜிடம் இவ்வளவு நாள் பேசியவள் என்று நினைத்துக் கொள்கிறார். அதேபோல், தேஜஸ்தான் இதுநாள்வரை சினேகாவிடம் பேசிக் கொண்டிருந்தவர் என நினைத்துக் கொள்கிறாள் சம்யுக்தா. இருவரும் சந்தித்து பேசிவிட்டு, பிறகு பிரகாஷ் ராஜிடம் சென்று தேஜஸ் உன்னைவிட அவள் வயதில் சிறியவள் என்று கூறுகிறார். அதேபோல், சம்யுக்தாவும் சினேகாவிடம் சென்று அவர் உன்னைவிட வயதில் சிறியவர் என்று கூறுகிறாள்.
இருவரும் தவறுதலாக ஜோடியை தேர்ந்தெடுத்துவிட்டோமா? என மனசுக்குள்ளே எண்ணி புழுங்குகிறார்கள். இதற்கிடையில், இவர்களுக்காக தூதுபோன தேஜஸும், சம்யுக்தாவும் காதலிக்க தொடங்கிவிடுகிறார்கள். ஒருகட்டத்தில், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று பிரகாஷ்ராஜ் சினேகாவை சந்திக்க நினைக்கிறார். இருவரும் சந்தித்தார்களா? ஒருவரையொருவர் சந்தித்து வாழ்க்கையில் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தில் பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் அருமை. தனது அனுபவ நடிப்பால் ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறார். சினேகா கோபம், விரக்தி, சோகம் என நம்மையும் பரிதாபப்பட வைக்கிறார். திருமண வயதை தாண்டிய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்திய அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் அருமை.
ஆபாசம் இல்லாமல் படத்தை எடுத்ததற்காக இயக்குனர் பிரகாஷ்ராஜூக்கு சலாம் போடலாம். ஆனால், ரசிக்கும்படியான காட்சிகள் இல்லாதது கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. படத்தின் காட்சிகளில் பெரிய சுவாரஸ்யம் இல்லை. கதையிலும் பெரிய திருப்பங்கள் இல்லாமல் எடுத்திருப்பதும், கதையை மெதுவாக நகர்த்தியிருப்பதும் கொஞ்சம் போரடிக்க வைத்திருக்கிறது.
ஊர்வசி, தம்பி ராமையா, குமரவேல் என காமெடி நடிகர்கள் இருந்தாலும் காமெடி காட்சிகள் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றமே. தேஜஸ், சம்யுக்தா ஆகியோரின் காதல் காட்சிகளிலும் அழுத்தம் இல்லை.
இளையராஜாவின் பின்னணி இசை படத்தோடு நம்மை ஒன்ற வைத்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம். ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு காட்சிகள் அமைக்கப்பட்ட விதம் அருமை.
மொத்தத்தில் ‘உன் சமையலறையில்’ சாப்பாட்டில் ருசி கம்மி.