சென்னையில் டாக்டருக்கு படிக்கும் பாலு மகேந்திராவின் மகன் எஸ்.சசிகுமார் ஒரு கிறிஸ்தவ பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய மகனை வீட்டை விட்டு விரட்டுகிறார். பாலு மகேந்திராவின் முதுமை காலத்தில் மகனின் குடும்பம் அவரைக் கவனித்துக் கொள்வதற்காக அவரிடம் வந்து சேருகிறது.
முதலில் அவர்களை வெறுத்தாலும் பேரன் வந்த பிறகு பாலுமகேந்திராவின் வாழ்க்கை சுவாரஸ்யமாக மாறுகிறது. இறுதியாக தாத்தா பேரனிடம் ஒரு பொறுப்பை விட்டு செல்கிறார் அதில் ஒரு இனத்தின் வளர்ச்சியே இருக்கிறது.
நடிகர் பாலு மகேந்திரா பல இடங்களில் இயல்பாக இருக்கிறார். வசனம் இல்லாத இடங்களில் அவருடைய கூர்மையான கண்களே பேசி விடுகிறது. அதேபோல் பேரனாக நடித்திருக்கும் ஆதி தாத்தாவுக்கு ஆங்கிலம் கற்று கொடுக்கிற காட்சியில் ரசிக்க வைக்கிறார்.
பாலு மகேந்திராவின் மகனாக வரும் எஸ்.சசிகுமார், மகளாக வரும் வினோதினி, மருமகளாக வரும் ரம்யா எல்லா பாத்திரங்களுமே அளவெடுத்ததுபோல் இயல்பாக இருக்கிறார்கள். எரிச்சல் ஊட்டாமல் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு பாலு மகேந்திராவே செய்திருக்கிறார் வழக்கம் போலவே. ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவை இன்னும் நாம் பல மடங்கு கொண்டாட வேண்டும் என்பதை நினைவுபடுத்தியிருக்கிறார். சாதாரண டிஜிட்டல் கேமராவில் உயர்ந்த தரத்தை தர பாலு மகேந்திரவால் மட்டுமே முடியும்.
இளையராஜா இசையில் பாடல்கள் இல்லாதது ஒரு குறையாகவே தெரியவில்லை. பின்னணி இசையால் அந்த குறையை தீர்த்து இருக்கிறார். தேவையான இடத்தில் அளவான இசை நல்ல ரசனையாக இருக்கிறது.
தமிழ் மொழி அழிந்துவிடக் கூடாதே என்ற கவலை பிரச்சாரமாக இல்லாமல் அழகியலாகவே இருக்கிறது. அதோடு நில்லாமல் சாதி, மதம் என்று சமூக பிரச்சினை எல்லாத்தையும் கதைக்குள்ளாகவே தொட்டிருக்கிறார்.
அத்தை தன் குழந்தைக்கு பால் தரும் காட்சியை பார்த்து விட்டு ஆதி தன் அம்மாவை ஏக்கமாக பார்த்து விட்டு பின் ஒன்றும் சொல்லாமல் இறுக்கி கட்டி பிடித்து முத்தம் கொடுத்து விட்டு ஓடும் காட்சி. அதேபோல் இயக்குனர் எம்.சசிக்குமார் வரும் ஒரே காட்சியில் அவருக்கு வசனமே இல்லாமல் பதிவு செய்ததும் இயக்குனர் பாலு மகேந்திரா டச்.
எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருந்தும் இது படம்தானா? என்ற சந்தேகம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. சராசரியான ரசிகர்கள் இந்த இடத்தில் நெளிய வாய்ப்பிருக்கிறது. பாலு மகேந்திரா மகன், மருமகள் இரண்டு பேருக்கும் தமிழ் தெரிந்தும் அவ்வளவு பெரிய நீண்ட ஆங்கில உரையாடல் நடக்கும் இடத்தை சராசரியான ரசிகன் ஏற்றுக் கொள்வானா? என்பது சந்தேகமே.
இருந்தும் இந்த தலை மறைக்கு இது முக்கியமான அவசியமான படம். பாலு மகேந்திரா படங்களில் குறிப்பிடத்தக்க படமும்கூட.
மொத்தத்தில் ‘தலைமுறைகள்’ ஒரு இனத்தின் வளர்ச்சி
மேலும் விமர்சனம் செய்திகள்
- மகளை மீட்க போராடும் தந்தை - லெகசி ஆப் லைஸ் விமர்சனம்
- ஜாக்பாட் என்ன ஆனது? - மஞ்ச சட்ட பச்ச சட்ட விமர்சனம்
- விவசாயத்தை பற்றி பேசும் கமர்ஷியல் படம் - சுல்தான் விமர்சனம்
- கார் திருட்டில் ஈடுபடும் மர்ம கும்பல் பிடிபட்டதா? - கால் டாக்ஸி விமர்சனம்
- பூட்டிய வீட்டிற்குள் மாட்டிக் கொள்ளும் இரண்டு பேர் - ரூம் மேட் விமர்சனம்