ஒரு நாள் இரவில் கதாநாயகி விபாவை நான்கு பேர் துரத்திக்கொண்டுவர, அந்த நபர்களுடன் நாயகன் சண்டைப் போடுகிறார். அந்த சண்டையின்போது, ஒருவன் நாயகி விபாவின் மீது செங்கல்லை தூக்கி வீச, காயமடைந்த விபாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார் தமன். அப்போது, அவளுக்கு புருஷன் என்றும் கையெழுத்து போட்டுவிடுகிறார். ஆனால், மண்டையில் பலத்த அடிப்பட்டதால் நாயகி விபா கோமா நிலைக்கு போய்விடுகிறார். நாயகியின் அப்பாவான டைரக்டர் ஏ.வெங்கடேஷ், மலேசியாவில் பெரிய பணக்காரராக இருக்கிறார்.
மலேசியாவில் இருந்து ஆஸ்பத்திரிக்கு பதறியடித்து வந்த அவர், தன் மகள் காதலிக்கும் ஆட்டோ டிரைவர் நீ தானா? ஹீரோவிடம் கேட்கிறார். அவர் பெரிய பணக்காரர், ஆள்மாறாட்டம் செய்தால் பணம் கிடைக்கும் என்று நினைத்து தமன், நான் தான் காதலன் என்று கூறுகிறார். அவர்களை மலேசியா வரும்படி அழைத்த வெங்கடேஷ், தன்னுடன் தமன், ஈரோடு மகேஷ் மற்றும் தம்பி ராமையாவை அழைத்து செல்கிறார்.
படத்தின் திருப்பு முனை மலேசியாவில் ஆரம்பிக்கிறது. வெங்கடேஷின் பணத்தை அபகரிக்க நினைக்கும் வில்லனாக பவர்ஸ்டார் வருகிறார். இதற்கும் ஒரு காமெடியான பிளாஷ் பேக் ஓடுகிறது.
இறுதியில் நாயகனுக்கு தேவையான பணம் கிடைத்ததா? நாயகி கோமா நிலையில் இருந்து மீண்டாரா? ஆள்மாறாட்டத்தில் நாயகன் மாட்டிக்கொண்டாரா? அல்லது வெங்கடேஷின் பணத்தை திட்டமிட்டபடி பவர் ஸ்டார் அபகரித்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் தமன் புதுமுகம் என்பதால் நடிப்பை வெளிக்காட்ட முயற்சித்திருக்கிறார். நாயகி விபா ஏற்கனவே ‘நான்’, ‘மதில்மேல் பூனை’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் இந்தப்படத்தில் முழுவதும் அவரை கோமா நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். இதனால் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவருக்கு தங்கையாக வரும் அர்ச்சனா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
காமெடியாக வரும் பவர் ஸ்டார், மற்ற கதாநாயகர்களை இமிட்டேட் செய்து காமெடி என்னும் பேரில் டான்ஸ் ஆடி நடித்திருக்கிறார். தம்பி ராமையா, ஈரோடு மகேஷ், அப்புக்குட்டி ஆகிய காமெடி கூட்டணிகள் இருந்தபோதும், படத்தில் ரசிக்கும்படியான காமெடி என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. முழுநீள காமெடியை கையில் எடுத்திருக்கும் டைரக்டர் ஏ.வெங்கடேஷ், கொஞ்சம் சீரியசாக ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘சும்மா நச்சுனு இருக்கு’, சுமாரா தான் இருக்கு.