மயங்கிய நிலையில் இருக்கும் அனாராவை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, தனது நண்பரின் முகவரியைக் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். 2 நாட்கள் கழித்து அனாராவை பார்க்கவரும் சந்தோஷ் அவள் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, தான் கொண்டுவந்த பூங்கொத்தை அவளருகில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறார்.
விழித்துப் பார்க்கும் அனாரா தன்னைக் காப்பாற்றியவர் வந்திருக்கிறார் என்பதை அறிந்தவுடன், உடனே எழுந்து சென்று அவனைத் தேடுகிறாள். ஆனால், சந்தோஷ் ஆஸ்பத்திரியை விட்டு சென்றுவிடுகிறார். சந்தோஷுக்கு தெரிந்த மருத்துவர் ஒருவர் அதே ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார். அவர் சந்தோஷ் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்துபோவதை பார்க்கிறார்.
இந்நிலையில், ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆன நாயகி அனாரா ஒருநாள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கிறார். அவளுக்கு எதிரில் வரும் சந்தோஷ் தன்னை அவளிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள வருகிறான். ஆனால், எதிர்பாராதவிதமாக அவள் மீது மோதி, இருவரும் கீழே விழுந்து விடுகின்றனர். தன்னைக் காப்பாற்றியவர் யார் என்பதே தெரியாத அனாரா, சந்தோஷை அடித்து அவமானப்படுத்துகிறாள்.
இதை பார்க்கும் சந்தோஷுக்கு தெரிந்த மருத்துவர் அவன்தான் உன்னைக் காப்பாற்றியவன் என அனாராவிடம் கூறுகிறார். இதனால் மனமுடையும் அனாரா, நாயகனின் முகவரியை தேடிச் சென்று அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். இவர்களின் திருமணத்தை நாயகனின் அப்பாவான நிழல்கள் ரவி எதிர்க்கிறார். இவர்களை எப்படியும் சேரவிடக்கூடாது என் பிரச்சினை பண்ணுகிறார். இதனால் மனமுடைந்த நாயகன் சந்தோஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறான்.
இறுதியில் தனது தந்தையை சமாதானப்படுத்தி நாயகன், நாயகியை கரம்பிடித்தானா? இல்லை குடிக்கு அடிமையாகி தன் வாழ்க்கையை தொலைத்தானா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சந்தோஷ் ஏற்கெனவே ‘மிட்டாய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இது இவருக்கு 2-வது படமாகும். இப்படத்தில் லண்டன் வாழ் இளைஞராக தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி அனாரா, அழகாக இருக்கிறார். இவர் நாயகனிடம் கோபப்படுவது, பின்னர் வழிந்துகொண்டு மன்னிப்பு கேட்பது என நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இவருடைய இளமையும், கவர்ச்சியும் இளைஞர்களை கவரும் விதமாக இருக்கிறது.
நாயகனின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி வில்லத்தனமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். நாயகனின் மாமாவாக வரும் மயில்சாமி, பாட்டியாக வரும் மனோரமா ஆகியோரை படத்தில் இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.
இன்றைய இளைஞர்களின் ரசனையை புரிந்து படமாக்கியுள்ளார் இயக்குனர் சுமன். காதலும், காதலில் ஏற்படும் சிக்கல்களையும் ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறார். படத்தை முழுக்க முழுக்க லண்டன் நகரத்திலேயே படமாக்கியுள்ளனர். சரவணன் ஒளிப்பதிவு லண்டனை மற்றொரு பரிமாணத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறது. விமலின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனம் தேவை.
மொத்தத்தில் ‘காதலே என்னை காதலி’ இளமை கொண்டாட்டம்.