நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.
விஜயகுமார்
நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.
நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.
படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-
"1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.
நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே''
என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,
"நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.
அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.
அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.
பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.
"சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
"அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.
உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.
மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக இருந்தது.
நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.
சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.
மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.
அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.
அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.
சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.
சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.
பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.
மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.
படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.
அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.
என் படம் முதல் ஷெட்ïலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.
அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.
எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.
திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.
நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்யூலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.
நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.
"ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.
அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.
எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!
இப்போது அடுத்த "ஷெட்ïல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.
சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.
நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.
"சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று
சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.
நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.
சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.
பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது. எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.
இந்தப் படத்தில்தான் நடிகை மீனா அறிமுகமானார். அப்போது அவர் ஏழெட்டு வயது சிறுமி. படத்துக்கு 2,500 ரூபாய் பேசி, 500 ரூபாய் அட்வான்சாக கொடுத்தேன். பின்னாளில் பெரிய கதாநாயகி ஆகிவிட்ட மீனா, "சினிமாவில் நடிக்க எனக்கு முதல் அட்வான்ஸ் கொடுத்தவர் விஜயகுமார் சார்தான்'' என்று என்னை பல தடவை பல பேரிடம் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார்.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.