அமெரிக்கா ராணுவ கேப்டனான இருக்கும் நாயகி மிலா ஜோவோவிச், காணாமல்போன சில வீரர்களைத் தேடி ஒரு பாலைவனப் பகுதியில் ரோந்து செல்கிறாள். அப்போது ஏற்படும் ஒரு மணல் புயலில் சிக்கி, வேறு ஒரு உலகத்திற்குள் சென்று விடுகிறாள்.
அங்கே இருக்கும் விசித்திரமான சில ராட்சச ஜந்துகள்தான் வீரர்கள் காணாமல் போனதற்குக் காரணம் என்பதை தெரிந்துக் கொள்கிறார். அந்த உலகில் நாயகன் டோனி ஜாவும் ஏற்கனவே சிக்கி இருக்கிறார். இவர்கள் இருவரும் ராட்சச ஜந்துகளை சமாளித்து அந்த உலகத்தில் இருந்து வெளியேறினார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
மிலா ஜோவோவிச்சின் ஆக்ஷன் அவ்வப்போது படத்தை ரசிக்க வைக்கிறது. இது தவிர, ஆக்ஷன் காட்சி ரசிகர்களுக்கென டோனி ஜாவும் இருக்கிறார். இவர்களின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
இயக்குனர் பவுல் ஆண்டர்சன் புதிய உலகம், அதில் நடக்கும் சண்டை, என கதையை அமைத்திருக்கிறார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனம். சில இடங்களில் காட்சிகள் நீளமாகவும், இன்னும் ஏதோ ஒன்று குறைகிறது என்னும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது.
கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ஏற்ப கிளென் மேக்பெர்சன் ஒளிப்பதிவும் பவுல் ஹஸ்லிங்கர் பின்னணி இசையும் அற்புதமாகவே அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் 'மான்ஸ்டர் ஹன்டர்' ஆறுதல்.