நாயகன் மனு பார்த்திபன், ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது தாயின் கட்டாயத்தின் பெயரில் சொம்பு சாமியாராக இருக்கும் லொள்ளு சபா மனோகரை சந்திக்க செல்கிறார். அங்கு வருபவர்கள் அனைவரும் சொம்பை நக்கி விட்டு செல்கிறார்கள். ஆனால், மனு பார்த்திபன் சொம்பை நக்காமல் செல்கிறார்.
ஒரு நாள் மொட்டை ராஜேந்திரன், மனு பார்த்திபனின் கனவில் வந்து, நீ முப்பது நாட்களில் இறக்க போகிறாய் என்று கூறுகிறார். இதைக் கேட்டு பயப்படும் மனு பார்த்திபன், பரிகாரம் சொல்லுங்கள் செய்கிறேன் என்று கேட்கிறார். அதற்கு மொட்டை ராஜேந்திரனும் மூன்று பரிகாரங்கள் செய்ய சொல்கிறார்.
இறுதியில் மொட்டை ராஜேந்திரன் செய்ய சொன்ன பரிகாரங்கள் என்ன? பரிகாரம் செய்து முப்பது நாட்களை மனு பார்த்திபன் கடந்தாரா? இல்லை இறந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பேண்டஸி காமெடி ஜானர்ல படத்தை இயக்கி நடித்திருக்கிறார் மனு பார்த்திபன். ஓரளவிற்கு ரசிகர்கள் ரசிக்கும்படி படத்தை இயக்கி இருக்கிறார். நடிப்பிலும் கவனம் பெற்றிருக்கிறார் மனு பார்த்திபன். முதல் படம் என்று தெரியாதளவிற்கு இயக்கி நடித்திருக்கிறார். சிறிய கதையை, பெரிய திரைப்படமாக எடுத்திருக்கிறார்.
நாயகியாக மோனிகா கொட்லா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மாடர்ன் எமனாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் மொட்டை ராஜேந்திரன். இவரது நடிப்பும் கெட்டப்பும் படத்திற்கு பலம். பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்.
எல்.ஜி.பாலாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கலாம். கனிராஜனின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘டைம் அப்’ குட் டைம்.