நாயகன் ஜிஜி, தனது அண்ணன், அண்ணியுடன் வாழ்ந்து வருகிறார். ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஜிஜி. ஒரு கோடி ரூபாய் கொடுங்க நான் படத்தில் நடிச்சு ஹீரோ ஆயிடுறேன் என்று அவர் தனது அண்ணனிடம் கூறுகிறார். ஆனால் இவரது அண்ணனுக்கு அதில் உடன்பாடு இல்லாததால், ஜிஜியை வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறார்.
அண்ணன் ஒத்துழைக்காததால், அவர் ஒரு குழுவுடன் இணைந்து படம் எடுக்க முடிவு செய்கிறார். அதற்காக ஹீரோயின் தேர்வு செய்யும்போது நாயகி கமலியை சந்திக்கும் நாயகன், அவர் மீது காதல் வயப்படுகிறார்.
நாயகன் ஜீஜியின் காதலை கமலி ஏற்றாரா? இல்லையா? இதையடுத்து இவர்கள் படம் எடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
நாயகன் ஜிஜிக்கு இது அறிமுக படம். முதல் படத்திலேயே நடனம், ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்தையும் முயற்சித்திருக்கிறார். இதில் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. நாயகி கமலி கொடுத்த வேலையை கசித்தமாக செய்திருக்கிறார். லிவிங்ஸ்டன் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இயக்குனர் நேசமானவன் சின்ன கதையை 2 மணிநேரம் படமாக்க வேண்டுமே என்று இடையிடையே காமெடி டிராக், குத்து பாடல் என எங்கெங்கோ கொண்டுபோய் இருக்கிறார். காமெடி எதுவும் ஒர்க்அவுட் ஆகாதது படத்தின் மைனஸ். கதாபாத்திரங்களின் தேர்வில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
வினோத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் தான். ரா ஆனந்தின் ஒளிப்பதிவில் தெளிவில்லை.
மொத்தத்தில் ‛வாங்க படம் பார்க்கலாம்’ சுமார்.