மகாநதி சங்கர் டிராவல் ஏஜென்ஸி நடத்தி வருகிறார். இவரின் மகளான நாயகி கோபிகா, தங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் மகளுடன் நட்பாக பழகி வருகிறார். நாளடைவில் மகாநதி சங்கர் அந்தப் பெண்ணை தத்தெடுத்து வளர்க்கிறார். நாயகி கோபிகாவை, போலீஸ் அதிகாரியாக வரும் கூல் சுரேஷ் காதலிக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, தனது டிராவல் ஏஜென்சிக்கும் வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருகிறார் மகாநதி சங்கர். அப்படி ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றபோது, அந்தப்பெண் இறந்துவிடுகிறது. அதை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயற்சிக்கிறார் சங்கர்.
அந்தப் பெண் மரணமடைந்தது போலீசுக்கு தெரியவர, போலீஸ் அதிகாரியாக வரும் நாயகன் கூல் சுரேஷ் யார் இந்த கொலையை செய்தது என்பதை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்குகிறார். இறுதியில் மகாநதி சங்கர் போலீசிடம் பிடிபட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தில் நாயகனாக கூல் சுரேஷ் நடித்துள்ளார். ஏராளமான படங்களில் அவரை காமெடி வேடங்களில் பார்த்ததால், இப்படத்தில் அவர் சீரியஸான வசனம் பேசினாலும் காமெடியாகவே தெரிகிறது. போலீஸ் வேடம் அவருக்கு சுத்தமாக எடுபடவில்லை. ஹீரோயினாக வரும் கோபிகா நாயர் அழகு பதுமையுடன், துணிச்சலான பெண்ணாக நடித்து கவனிக்க வைக்கிறார்.
வில்லனாக நடித்துள்ள மகாநதி சங்கர் தன் பங்கிற்கு மிரட்டியுள்ளார். தெனாலி, தேனி முருகன், விஜய் கணேசன், சங்கர், புளோரண்ட் பெரேரா, சுமதி, அஞ்சலி ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
பொது இடங்களில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை காட்ட முயற்சித்துள்ள இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். கதாபாத்திரங்கள் தேர்விலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அதிஷ் உத்ரியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். மகிபாலனின் ஒளிப்பதிவு, சிறு பட்ஜெட் படம் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது.
மொத்தத்தில் ‘சித்திரமே சொல்லடி’ சோபிக்கவில்லை.