கல்லூரி நண்பர்கள் 5 பேர் காட்டுக்குள் சென்று டாக்குமெண்டரி எடுக்க திட்டமிடுகின்றனர். அவர்களில் ஒரு பெண்ணின் ஊர் கேரளா, தமிழ்நாடு எல்லையில் உள்ள வனப்பகுதி அருகே அமைந்துள்ளது. அங்கு சென்று டாக்குமெண்டரி எடுக்க திட்டமிட்டு, அங்குள்ள மர்மக்காட்டுக்கு செல்கின்றனர்.
காட்டுக்குள் சென்றவர்கள் ஐந்து நாட்கள் ஆகியும் வெளியே வராததால், அவர்களை தேடி கண்டுபிடிக்க போலீசை அணுகுகின்றனர். அந்த மர்மக் காட்டில் பேய் இருப்பதாகவும், காட்டுக்குள் செல்பவர்கள் உயிரோடு வெளியே வரமாட்டார்கள் என்றும் சொல்லப்படுவதால், போலீசும் அங்கு செல்ல பயப்படுகின்றனர்.
இதனால் இந்த காட்டுக்குள் ஏற்கனவே சென்றுவந்த ஒருவனிடம் உதவி கேட்கின்றனர். அவனும் காட்டுக்குள் செல்ல சம்மதிக்கிறான். காட்டுக்குள் செல்லும் அவன் அவர்கள் ஐந்து பேரையும் கண்டுபிடித்தானா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் இயக்குனர் ராஜ் கோகுல் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். நாயகியாக சவந்திகா, மற்றொரு ஹீரோவான ஜுபிலி ராஜன் ஆகியோர் புதுமுகமாக இருந்தாலும், திறம்பட நடித்திருக்கிறார்கள். நண்பர்களாக வருபவர்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
படத்தின் இயக்குனர் ராஜ் கோகுல் தாஸ், படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்துள்ளார். வில்லனை சஸ்பென்சாக வைத்திருந்து கிளைமாஸில் காட்டியுள்ள விதம் சிறப்பு. பேய் படம் என சொல்கிறார்கள், ஆனால் அவ்வளவாக பயம் வராதது படத்தின் மைனஸ். படத்தில் நிறைய இடங்களில் மலையாளத்தில் பேசியுள்ளதால் டப்பிங் படம் பார்ப்பதை போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
சஜித் சங்கர் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். திருப்பதி ஆர். சுவாமியின் ஒளிப்பதிவை பாராட்டலாம். இரவு நேர காட்சிகள் அதிகம் உள்ள போதிலும் திறம்பட கையாண்டுள்ளார்.
மொத்தத்தில் ‘பியா’ பயமில்லை.