நாயகன் ஜீவா, படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார். பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் திஷா பாண்டேவின் அறிமுகம் சித்தப்பா பாண்டியராஜன் மூலம் கிடைக்கிறது. திஷா செய்யும் ஆராய்ச்சி தன் கதைக்கு பயன்படுமே என்று அவருடன் பயணப்படுகிறார் ஜீவா.
ஜீவா, அவரது நண்பர் யோகேஸ்வரன், பாண்டியராஜன், திஷா பாண்டே, அவரது தோழி ஐவரும் கிராமத்துக்கு வருகின்றனர். அங்கு ஒரு வீட்டில் பேய் இருப்பதாக எல்லோரும் பயமுறுத்துகிறார்கள். அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. ஆவிகளை அடக்கி வைத்திருக்கும் கொம்பு பற்றியும் அதை எடுத்தவர்கள் மர்மமாக கொல்லப்பட்டதும் தெரிய வருகிறது. கொம்பின் பின்னணி என்ன? ஜீவா, திஷா பாண்டே உள்பட அனைவரும் ஆவிகளிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதே கதை.
கொம்புக்குள் ஆவிகள் என்ற சுவாரசியமான கதையை காமெடி, காதல், கவர்ச்சி கலந்து இயக்குனர் இப்ராகிம் கொடுத்துள்ளார். குடும்பத்தோடு பார்த்து பயந்து, சிரித்து ரசித்து மகிழ ஏற்ற கமர்சியல் படமாக கொடுத்துள்ளார்.
ஜீவாவுக்கு இது முக்கியமான படம். காமெடி கலந்து நடிப்பை கொடுத்து இருக்கிறார். இறுதி காட்சியில் கமர்சியல் நாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். நடனம், நடிப்பு, சண்டை என நாயகனுக்கான அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. திஷா பாண்டே வழக்கமான நாயகியாக அல்லாமல் கதையை நகர்த்துகிறார்.
பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், அம்பானி சங்கர், யோகேஸ்வரன் என காமெடி நடிகர்கள் தங்களால் முடிந்த வரை படத்தை சுவாரசியமாக்கி உள்ளார்கள். வில்லனாக வரும் எம்.பன்னீர்செல்வமும் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார்.
தேவ்குருவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. சுதீப்பின் ஒளிப்பதிவும் வண்ணமயம். கிரீசனின் படத்தொகுப்பு கச்சிதம்.
மொத்தத்தில் 'கொம்பு' கூர்மை.