மிருகங்களிடம் பேசும் அபூர்வ திறமையை கொண்ட டாக்டர் டூ லிட்டில், தன்னுடைய மனைவியின் மரணத்திற்கு பின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இதனால் வெளி உலகத்தோடு தொடர்பில்லாமல் தன்னுடைய பிரம்மாண்டமான அரண்மனையில் மிருகங்களுடன் முடங்கி கிடக்கிறார். திடீரென நாட்டுடைய ராணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரை காப்பாற்ற வருமாறு டாக்டர் டூ லிட்டிலிற்கு அழைப்பு வருகிறது.
பின்னர் ராணியை பரிசோதனை செய்யும் டாக்டர் டூ லிட்டில், அவருடைய உடலில் விஷம் கலந்திருப்பதை அறிகிறார். ஒரு அபூர்வ பழத்தின் மூலம் தான் ராணியை காப்பாற்ற முடியும் என்பதால், அந்த பழத்தை தேடி டாக்டர் டூ லிட்டில், அவருடன் அரண்மனையில் இருக்கும் மிருகங்களுடன் செல்கிறார். இந்த பயணத்தின் போது அவருக்கு அந்த அபூர்வ பழம் கிடைத்ததா? இல்லையா? ராணிக்கு விஷம் வைத்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
ராபர்ட் டவ்னி ஜூனியர், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். இதனால் டூ லிட்டில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் இப்படத்தில் அவரது நடிப்பு எதிர்பார்த்த அளவு இல்லாதது ஏமாற்றம் தான். காமெடி காட்சிகள் ஓரிரு இடங்களில் ஒர்க் அவுட் ஆனாலும், பெரும்பாலான இடங்களில் எடுபடாமல் போனது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ். படம் பார்ப்பவர்களுக்கு நம்ம அயர்ன் மேன் ஏன் இப்படி பண்ணினார்னு கேட்கும் அளவுக்கு அமைந்துள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் படம் பலமாக இருந்தாலும், ஸ்டீபன் ககனின் மோசமான திரைக்கதை சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும் கதாபாத்திரங்களின் தேர்விலும் கவனம் செலுத்தி இருக்கலாம். இப்படத்தில் வரும் டுவிஸ்ட்டுகளும் பார்த்து பழகியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. டேனி எல்ஃப்மேனின் பின்னணி இசையும், குயிலெர்மோ நவாரோவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றன.
மொத்தத்தில் ’டூ லிட்டில்’ ஏமாற்றம்.