தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் மேக்ஸ் ஜாங், ஒருவரிடம் ஏற்பட்ட தோல்வியால் தற்காப்பு கலையை விட்டுவிட்டு ஒரு கடை வைத்துக் கொண்டு மகனுடன் வாழ்ந்து வருகிறார். இனி யாரிடமும் சண்டை போடக் கூடாது என்று இருக்கும் மேக்ஸ் ஜாங், ஒருநாள் தன் மகனுக்காக பரிசு வாங்கிக் கொண்டு செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு கேங்கிடம் சண்டை ஏற்படுகிறது.
இந்த சண்டையில் அவர்களை அடித்து நொறுக்குகிறார் மேக்ஸ் ஜாங். இதன்பின் கோபமடையும் அந்த கேங், மேக்ஸ் ஜாங்கை பழிவாங்க நினைக்கிறார்கள். மேலும் மேக்ஸ் ஜாங்கிற்கு பல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இறுதியில் மேக்ஸ் ஜாங் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? யாரிடமும் சண்டை போடக்கூடாது என்ற முடிவு அவர் மாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மேக்ஸ் ஜாங், சண்டைக்காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனுக்காக சண்டைப்போடுவது, தயங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். வில்லனாக வரும் பட்டிஸ்டா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் டோனி ஜா.
தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் யூன் வூ பிங். ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் பிரம்மாண்டமாகவும் ரசிக்கும் படியாகவும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக மேக்ஸ் ஜாங் - டோனி ஜா, மேக்ஸ் ஜாங் - பட்டிஸ்டா சண்டைக்காட்சிகள் சிறப்பு. டே டையின் இசையும், டேவிட்டின் ஒளிப்பதிவும் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மாஸ்டர் இசட்: ஐபி மேன் லெகசி’ அதிரடி.