ஆதரவற்றவராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். சிறுவயதில் இருந்தே திருடனாக இருந்து வருகிறார். அப்பா, அம்மா இல்லாமல் கோடிஸ்வரனாக இருக்கும் தாத்தாவுடன் வளர்ந்து வருகிறார் பிரியா மணி. இவர் அணிந்திருக்கும் ஜெயின் ஒன்று ஜூனியர் என்.டி.ஆருக்கு கிடைக்கிறது.
திருடன் என்பதால் அதை விற்க முயற்சி செய்கிறார். ஆனால், அது போலியான தங்கம் என்பதால் விற்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் அந்த ஜெயினை தூக்கி எறிகிறார். ஆனால், ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்த ஜெயின் அவரிடம் வருகிறது. வளர்ந்து பெரியவனாக இருக்கும் ஜூனியர்.என்.டி.ஆர். மீண்டும் பிரியாமணியை சந்திக்கிறார். இவரை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.
இந்நிலையில், ஒரு திருட்டின் போது எமதர்மரை ஜூனியர் என்.டி.ஆர். திட்டுகிறார். இதனால் கோபமடையும் எமதர்மராஜா ஆயுள் நாட்கள் அதிகமாக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரை போலி கணக்கு எழுதி எமலோகத்திற்கு வரவழைத்து விடுகிறார். இந்த விஷயம் ஜூனியர் என்.டி.ஆருக்கு தெரிய வர எமதர்மராஜாவை எப்படி சமாளித்தார்? மீண்டும் பூலோகம் திரும்பினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
2007ம் ஆண்டு வெளியான எமடோங்கா என்ற தெலுங்கு படத்தினை டப்பிங் செய்து விஜயன் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் காமெடியில் கலக்கி இருக்கிறார். துறுதுறு இளைஞனாக மனதில் பதிகிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரியா மணி, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். எமனாக வரும் மோகன்பாபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
காமெடி கலந்து பிரம்மாண்டமாக படத்தை இயக்கி இருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. அந்த காலத்திற்கு ஏற்ப கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து ரசிக்க வைத்திருக்கிறார். கீரவாணி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். செந்தில் குமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘விஜயன்’ காமெடி கலாட்டா.