ஓவியராக இருக்கும் நாயகன் உதய் ஒரு பெண் ஓவியத்தை வரைகிறார். அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணை நேரில் கண்டதும் காதல் கொள்கிறார். தன்னுடைய காதலை நாயகி லீமாவிடம் சொல்லுகிறார். ஒரு கட்டத்தில் உதய்யின் காதலை ஏற்றுக் கொள்ளும் லீமா பாபு, இருவரும் காதலித்து வருகிறார்கள்.
நன்றாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் காதலில் ஜாதி தடையாக வருகிறது. இதனால், இவர்களுடைய காதலில் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் பிரச்சனைகளை கடந்து நாயகி லீமா பாபுவை நாயகன் உதய் கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் உதய், காதல், ரொமன்ஸ், சண்டைக்காட்சி என தன்னால் முடிந்தளவு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி லீமா பாபு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவர்களை சுற்றியே படம் நகர்வதால் மற்ற நடிகர்களுக்கு அதிக வேலை இல்லை.
கிடா விருந்து என்ற படத்தை இயக்கிய தமிழ் செல்வன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். காதல், ஜாதியை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். பல காட்சிகள் மற்ற படங்களின் காட்சியை ஞாபகப்படுத்துகிறது. சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம்.
தீபக் ஹரிதாஸின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ராஜ்ஜின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘உதய்’ சுவாரஸ்யம் குறைவு.