எல்சா, ஆனா இருவரும் அக்கா, தங்கைகள். இவர்கள் சிறுவயதில் இருக்கும் போது இவருடைய தந்தை, பக்கத்தில் இருக்கும் மர்ம காடு பற்றிய சிறிய கதையை கூறுகிறார். மேலும் அந்த காடு தற்போது பனி புகையால் சூழப்பட்டிருப்பதையும் சொல்கிறார்.
எல்சாவும், ஆனாவும் பெரியவர்களாக வளர்கிறார்கள். எல்சாவிற்கு அடிக்கடி மர்மக்குரல் ஒன்று கேட்கிறது. அது என்ன குரல் யாருடயது என்பதை அறிய முயற்சி செய்கிறார். அந்த குரல் பனி புகையால் சூழப்பட்டிருக்கும் மர்ம காட்டில் இருந்து வருவதை அறிந்து அங்கு செல்கிறார் எல்சா.
எல்சாவுடன் தங்கை ஆனா, பனிமனிதன் ஒலாஃப், கிரிஸ்டாஃப் உள்ளிட்டோர் மர்ம காட்டுக்குள் செல்கிறார்கள். ஆனால், அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. எல்சாவிற்கு இருக்கும் அதித சக்தியால் அந்த காட்டுக்குள் அனைவரும் சென்று விடுகிறார்கள்.
அங்கு பல பிரச்சனையில் சிக்கும் எல்சா, இறுதியில் அதிலிருந்து தப்பிக்கிறார்? அந்த குரலின் பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஃப்ரோஸன் முதல் பாகத்திற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து ஃப்ரோஸன் 2 கதை தொடங்குகிறது. வழக்கமான டிஸ்னி படங்களில் இடம்பெறும் தத்ரூபமான அனிமேஷன், இப்படத்தில் தரமாகவே இருக்கிறது. திரைக்கதையுடன் வரும் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. முதல் பாகத்தில் இருந்த உணர்வுபூர்வமான காட்சிகள் இப்படத்தில் இல்லை. இருப்பினும் சுவாரஸ்யமாக திரைக்கதை செல்கிறது.
தமிழில் எல்சாவிற்கு ஸ்ருதிஹாசனும், ஆனாவிற்கு டிடியும், பனி மனிதன் ஒலாஃப்க்கு சத்யனும் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஸ்ருதிஹாசன் பாடல்களால் கவர்ந்திருக்கிறார். ஆனாவின் பின்னணி குரல் டிடியை கண்முன் நிறுத்துகிறது. ஆனாவின் பின்னணி குரலுக்கு டிடி சரியான தேர்வு. பனிமனிதன் உருவத்தில் கலகலப்பூட்டியிருக்கிறார் சத்யன். பின்னணி இசையும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஃப்ரோஸன் 2’ குழந்தைகளின் கொண்டாட்டம்.