1982ல் ஆரம்பித்த ‘ராம்போ‘ சீரிஸ்களின் ஐந்தாம் பாகமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. 2008ல் பர்மா பிரச்னைகளைக் கடந்து பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஜான் ராம்போ அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். உடன் தோழி மரியா பெல்ட்ரென் மற்றும் அவரின் பேத்தி கேப்ரியல் சகிதமாக தனது தந்தையின் குதிரைப் பண்ணையை பார்த்துக்கொண்டு வாழ்கை சுமூகமாக போகிறது.
இதற்கிடையில் கேப்ரியலின் தந்தை யாரென கண்டுபிடித்துவிட்டதாகவும் அவர் மெக்ஸிகோவில் இருப்பதாகவும் அவரது தோழி கூற யாருக்கும் தெரியாமல் கேப்ரியல் மெக்ஸிகோவிற்கு செல்கிறார். அங்கு அவரது அப்பா நீங்கள் எனக்குத் தேவையில்லை என்று கூற மனமுடையும் கேப்ரியல் உள்ளூர் பார் ஒன்றில் குடிக்கிறார். அப்போது பெண்களைக் கடத்தி விற்கும் கும்பலால் கடத்தப்படுகிறார் கேப்ரியல்.
இறுதியில் காணாமல் போன பெண்ணை ஜான் ராம்போ காப்பாற்றினாரா? பெண்களைக் கடத்தி விற்கும் கும்பலை அளித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
‘ராம்போ‘ சீரிஸ்களின் ரசிகர்களுக்கு ஏற்ப படம் முழுக்க வில் அம்புகள், ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள் என வைத்திருக்கிறார்கள். சில்வெஸ்டர் ஸ்டாலோன் வயசானாலும் இன்னும் ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
அதற்கேற்ப வில்லனை கதவில் செருகி இதயத்தையே கிழித்து எடுத்துக் காண்பிப்பது, தலையை ரோட்டில் உருட்டி விட்டுச் செல்வது என அதிர்ச்சி வைத்தியம் தருகிறார். வீடு தேடி சென்று வில்லன்களை பந்தாடுவது, மொத்த கும்பலையும் வரவழைத்து பொறி அமைப்பது படத்திற்கு பிளஸ்.
பிராண்டன் கால்வினின் ஒளிப்பதிவும், பிரயன் டெயிலரின் பின்னணி இசையும் அருமை.
மொத்தத்தில் ‘ராம்போ லாஸ்ட் பிளட்‘ ராக்.