ஆஞ்சநேயர் பக்தரான சுனில் ஷெட்டி குஸ்தி வாத்தியார். ஒருநாள் சாலையில் உணவிற்காக சண்டைபோடும் சிறுவனாக சுதீப்பை பார்க்கிறார். சுதீப் சண்டையிடும் விதம் இவருக்கு மிகவும் பிடித்துப்போக அவனிடம் விசாரிக்கிறார். அப்போது அவன் ஒரு அனாதை என்பது தெரியவருகிறது.
பின்பு சுதீப்பை கூட்டிவந்து அவனுக்கு பயிற்சி கொடுத்து தன் மகனாகவே வளர்த்து மிகப்பெரிய பயில்வான் ஆக ஆக்குகிறார். சுனில் ஆசை சுதீப்பை ஒரு நேஷனல் சாம்பியன் ஆக்கவேண்டும் என்பது. சுதீப் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணத்தில் அவருக்கு கட்டுப்பட்டு இருக்கிறார். அப்போது கோவிலுக்கு செல்லும் இவர் அங்கு நாயகியை பார்க்கிறார். பார்த்தவுடன் காதலில் விழுகிறார், பின்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்கிறது.
தந்தையின் பேச்சை மீறி நாயகியை கரம்பிடிக்கிறார் சுதீப். இதனால் தந்தை சுனிலுக்கும் சுதிப்பிற்கும் உறவில் விரிசல் விழுகிறது. சுதீப் குஸ்தி போடுவது இல்லை என்று சத்தியம் செய்கிறார். பின்பு நாயகியை அழைத்துக்கொண்டு மிகவும் ஏழ்மையான வாழ்க்கையை தொடங்குகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.
மனைவி குழந்தை என குடும்பத்தினரோடு சந்தோஷமாக வாழும் சுதீப்பை மீண்டும் பிரச்சனை தேடி வருகிறது. இவரிடம் குஸ்தியில் தோல்வியடைந்த மகாராஜா ஒருவர் சுதீப்பை சீண்டி சண்டைக்கு அழைக்கிறார். ஆனால் தந்தைக்கு செய்த சத்தியத்தை காப்பற்ற சண்டை போடாமல் இருக்கிறார்.
இதேசமயம் பாக்ஸிங் கோச்சாரான சரத். இவரது மாணவனான கபீர் துகான் சரத்தை மிகவும் அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால் கபீரை ஜெயிக்கும் அளவிற்கு ஒரு பாக்சரை உருவாக்க வேண்டும் என்று அதற்கு சரியான வீரர் ஒருவர் தேவை என்று தேடி அலைகிறார் சரத். இறுதியில் சுதீப் சண்டையிட்டு ராஜாவை வென்றாரா? சரத் தேடிக்கொண்டிருக்கும் பாக்ஸர் கபீரை தோற்கடித்தாரா? தந்தையின் உடனான பிரச்சனையில் விருந்து மீண்டு தந்தையுடன் சுதீப் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை
சுதீப், சுனிலுக்கு நல்ல மகனாகவும் நல்ல மாணவனாகவும் இடைவேளை வரை பொருந்தியிருக்கிறார். இடைவேளைக்கு பிறகு அன்பான கணவனாகவும், பாசமிகு தகப்பனாகவும் சென்டிமெண்ட் கலந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பயில்வானுக்கு உண்டான கட்டுமஸ்தான் உடலுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பது சிறப்பு. முதல் பாதியில் இளமை துள்ளளோடு ரசிக்க வைக்கும் நாயகி அகன்ஷா இடைவேளைக்கு பிறகு மகள் மீதான பாசம் என குடும்பப்பாங்கான பெண்ணாக வந்து கவர்ந்திருக்கிறார்.
சுனில் ஷெட்டி, படம் முதல் காட்சியில் இருந்து தோற்றத்தில் கவர்கிறார். ஒரு குஸ்தி வாத்தியாருக்கு உண்டான பொறுமை, உடல் மொழி என படம் இறுதிவரை வந்து மனதில் நிற்கிறார். சுதீப்பின் நண்பராக வரும் காமெடியன், பாக்ஸிங் கோச்சராக வரும் சரத், மகாராஜாவாக சுஷாந் சிங், பாக்ஸராக வரும் கபீர் துகான் சிங் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்குனர் எஸ்.கிருஷ்ணா, பயில்வான் என்கிற தலைப்பிற்கு ஏற்றவாறு சண்டை காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், சுதீப்-சுனில் ஷெட்டி இடையேயான தந்தை மகன் சென்டிமெண்ட், மகள் மீதான பாசம் என அனைத்துவகை ரசிகர்களையும் கவரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளது சிறப்பு. குறிப்பாக தனது மகளை சிறிது நேரம் தொலைத்ததற்கே பதறும் சுதீப், நாயகியின் தந்தையை நினைத்து வருந்தும் காட்சி அல்டிமேட். காட்சிகள் நீளமாக இருப்பது படத்திற்கு பெரும் பின்னடைவு. பின்னணி இசை படத்திற்கு பலமாக இருந்தாலும் பாடல்கள் பலவீனம் தான். கருணாகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
மொத்தத்தில் ‘பயில்வான்’ பலமில்லை.