ஜேசன் ஸ்டாதமின் (ஷா) தங்கை வனேசா ஒரு சீக்ரெட் போலீஸ் ஏஜெண்ட். உலகை அழிக்கும் வல்லமை உள்ள வைரஸை எடுக்க செல்கிறார் வனேசா. இதேபோல் வில்லனும் வைரஸை எடுக்க முயல்கிறார். இந்த வேளையில் வைரஸை கண்டுபிடிக்கும் வனேசா, அதை தனது உடலில் ஏற்றிக்கொள்கிறார். ஆனால் சூழலை மாற்றும் வல்லமை படைத்த வில்லன், சீக்ரெட் போலீஸ் ஏஜெண்டான வனேசா வைரஸை திருடிவிட்டதாக பழி சுமத்துகிறார்.
இதனால் வனேசாவிடம் உள்ள வைரஸை மீட்க போலீஸ் அதிகாரியான டுவேன் ஜான்சன் (ஹாப்ஸ்) நியமிக்கப்படுகிறார். அவரின் உதவியாளராக ஜேசன் ஸ்டாதம் (ஷா) செல்கிறார். எதிரெதிர் துருவங்களான இருவரும் எப்போதும் சண்டை போட்டுக்கொள்ளும் குணமுடையவர்கள். முதலில் இணைந்து பணியாற்ற மறுக்கும் இருவரும் பின்னர் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவிக்கின்றனர். அப்போது வைரஸை திருடியது தனது தங்கை என்பதையும், அவள் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதையும் அறிகிறார் ஜேசன் ஸ்டாதம் (ஷா).
தன்னிடம் உள்ள சக்தி மூலம் டுவேன் ஜான்சன் (ஹாப்ஸ்) மற்றும் ஜேசன் ஸ்டாதம் (ஷா) மீது பழி சுமத்துகிறார் வில்லன். இதையடுத்து வனேசாவிடம் உடம்பில் உள்ள வைரஸை எடுத்தார்களா? வில்லனின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ள படத்தொடர். அப்படங்களில் கார் சேசிங், கடத்தல் , ஆக்சன் என சில அம்சங்கள் இடம்பெற்றிருக்கும், கிட்டத்தட்ட ஒரே கதை தான் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இந்த படத்தில் ஹாப்ஸ் மற்றும் ஷா என்ற இரண்டு கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதை அமைத்து சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் டேவிட் லெட்ச்.
ஹாப்ஸ் மற்றும் ஷாவாக வரும் டுவேன் ஜான்சன், ஜேசன் ஸ்டாதம் இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பலம். இருவரின் ஆக்சன் காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வதும், பஞ்ச் டயலாக் பேசுவதுமாக நம்மை ரசிக்க வைக்கிறார்கள். படத்தில் வரும் தங்கை மற்றும் வில்லன் கேரக்டர்கள் நடிப்பில் மிளிர்கின்றனர். ஜோனாதன் செலாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் “பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா” ஆக்சன் விருந்து.