நாயகன் அனீபாவின் தந்தை ஆர்.வி.தம்பி கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்கு பின்னர் தனது மகனும் விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். அதன் எதிரொலியாக அவர் தனது மகன் அனீபாவை விவசாய கல்லூரியில் படிக்க வைக்கிறார். இந்த வேளையில் நாயகனின் முறைப்பெண்ணான நாயகி பிந்து, திருமணம் செய்யும் முனைப்பில் நாயகனை சுற்றி சுற்றி வருகிறார். இதில் விருப்பம் இல்லாத நாயகன் விலகி செல்கிறார்.
இந்த சூழலில் வில்லன் ஜெயக்குமாரிடன் விவசாய நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்குகிறார் நாயகனின் தந்தை ஆர்.வி.தம்பி. நாயகன் அனீபாவும் படித்து முடித்து விவசாயம் செய்கிறார். இயற்கை விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என நாயகனின் தந்தை ஆர்.வி.தம்பி உறுதியாக இருக்கிறார். ஆனால் நாயகன் அனீபா செயற்கை முறையில் விவசாயம் செய்யும் முனைப்போடு இருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, நாயகனின் விவசாய நிலத்தை அரசியல்வாதி ஒருவர் அடைய முயல்கிறார். இதற்கு வில்லன் ஜெயக்குமாரை பகடை காயாக பயன்படுத்துகிறார். விவசாயம் செய்ய முடியாததால் மனமுடைத்து போகும் நாயகனின் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். இதையடுத்து இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணரும் நாயகன், வில்லனிடம் இருந்து விவசாய நிலத்தை மீட்டாரா? இயற்கை விவசாயம் செய்து தந்தையின் ஆசையை நிறைவேற்றினாரா? நாயகியை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குனர் எஸ்.பி.இஸ்மாயில். படத்தில் பெரும்பாலான புதுமுகங்கள் நடித்திருந்தாலும், அனைவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் நாயகன் அனீபா, காதல், சண்டை, பாசம் என நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகனின் முறைப்பெண்ணாக வரும் நாயகி பிந்து, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
நாயகனின் தந்தையாக நடித்துள்ள ஆர்.வி.தம்பி, விவசாயி காமராசுவாகவே வாழ்ந்துள்ளார். அரசு கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயக்குமார் வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். மற்றபடி அப்புகுட்டி, கராத்தே ராஜா, பாபு, கவிதா, ராஜேஷ் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். கோனேஸ்வரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. கே.வி.மணியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
மொத்தத்தில் ’ஐ.ஆர்-8’ விவசாயிகளின் வலி.