நாயகனோட அப்பா ஒரு அறிவியல் பேராசிரியர். இவர் மார்ஸுக்கு செல்வதற்கு புது வழியை கண்டு பிடிக்கிறார். அதற்காக ஒரு மலை மேல் ஏறி நின்று முயற்சி செய்கிறார். 20 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்யும் அவருக்கு எந்த பலனும் கிடைக்காமல் இருக்கிறது.
போதைக்கு அடிமையாக இருக்கும் இவரது மகனிடம், நண்பர் ஒருவர் அப்பாவை பற்றி கிண்டல் செய்ய அவரை நாயகன் கொலை செய்து விடுகிறார். போலீஸ் இவரை கைது செய்து, போதை மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கிறார்கள். அங்கு நண்பர் ஒருவருடன் இணைந்து தப்பித்து வீட்டுக்கு செல்கிறார் நாயகன்.
பின்னர், பழனி மலையில் குறிப்பிட்ட நாளில் நின்றால் மார்ஸுக்கு செல்லலாம் என்ற புது வழியை கண்டுபிடிக்கிறார் நாயகன். அதன்படி, பழனிக்கு நண்பருடன் செல்ல, போலீஸ் இவர்களை பின் தொடர ஆரம்பிக்கிறது.
இறுதியில் நாயகன் மார்ஸ் சென்றாரா? போலீசிடம் சிக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக பிரவீண் ராஜா நடித்திருக்கிறார். போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தெளிவாக நடித்திருக்கிறார். சென்டிமென்ட், காதல் ஏதும் இல்லாமல் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது நண்பராக வருபவர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகன் அப்பாவாக வருபவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகிய புதுமுகங்களின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது.
இப்படத்திற்கு வசனம் எழுதியதோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. வசனங்கள் கைக்கொடுத்தாலும் திரைக்கதை பெரியதாக எடுபடவில்லை. 45 நிமிடத்தில் சொல்ல வேண்டிய கதையை நீண்ட நேரம் எடுத்து போரடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிஜு. தேவையில்லாத காட்சிகள் பார்ப்பவர்களின் பொறுமை சோதிக்கிறது.
நிரஞ்சன் பாபுவின் இசையும், பிஜுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சென்னை பழனி மார்ஸ்’ தூரம் அதிகம்.