அனபெல், அனபெல் கிரியேஷன்ஸ் ஆகிய பட பாகங்களை தொடர்ந்து அனபெல் கம்ஸ் ஹோம் என்ற பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது.
பேட்ரிக் வில்சனும், வேரா பார்மிகா இருவரும் பல பேய்களின் ஆன்மாக்களை தங்களுடைய வீட்டிற்குள் அடைத்து வைக்கிறார்கள். இதில் அனபெல் பொம்மையில் இருக்கும் பேயை வீட்டிற்குள் கொண்டு வந்து அடைக்கிறார்கள். அப்போது தன் மகளுடன் கூடிய மூன்று சிறுமிகளை வீட்டில் தனியாக விட்டு வெளியே செல்கிறார்கள்.
அந்த மூன்று சிறுமிகளும், பேய்கள் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சென்று அனபெல் இருக்கும் கண்ணாடி அறையை திறந்து விட்டுவிடுகிறார்கள். வெளியே வரும் அனபெல் வீட்டில் இருக்கும் மற்ற பேய்களையும் எழுப்பி விட்டுவிடுகிறது.
இறுதியில் அனபெல்லை மீண்டும் கண்ணாடி அறைக்குள் அடைத்தார்களா? சிறுமிகள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
பேய் படங்கள் என்றாலே ஹாலிவுட் படங்கள் தான் என்று மீண்டும் இப்படம் மூலம் நிருபித்திருக்கிறார்கள். பேய் வரும் ஒவ்வொரு நிமிடமும் இதயம் அப்படியே ஒரு நிமிடம் நிற்பது போல் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கேரி டாபர்மேன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மெதுவாக தொடங்கும் திரைக்கதை போகப்போக வேகம் பிடிக்கிறது. பல காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பவர்களை பயமுறுத்தியிருக்கிறார்கள். மைக்கேல் பர்கெசின் ஒளிப்பதிவும், ஜோசப் பிஷாராவின் இசையும் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அனபெல் கம்ஸ் ஹோம்’ மிரட்டல்.